கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 34.6 லட்சம் பேர் இந்தியாவின் அமைப்பு சார்ந்த தொழிலாளர் சக்தியில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேளாண் சாராத துறைகளில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
அரசால் நடத்தப்படும் சமூக பாதுகாப்பு அமைப்புகளான ஊழியர் சேமலாப நிதி அமைப்பு மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு போன்றவற்றின் தகவல்களைப் பொதுப்படுத்தி இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், வேலைவாய்ப்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தியதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளனவா என்பது குறித்த தெளிவான பார்வை கிடைக்கவில்லை. இந்தத் தகவல்கள் சம்பள முறையை ஒழுங்குபடுத்தினாலும் கூட, வேலைவாய்ப்புகளின் நிலை குறித்த தெளிவான பார்வையை வழங்கவில்லை என்றும் தகவல்கள் பெரியளவில் போலியாக்கப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய தகவல்களின் படி, ஊழியர் சேமலாப நிதி அமைப்பின் கீழ் 31.1 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த அமைப்பின் தகவல்களுக்கு வரம்புகள் இருப்பதால் அவற்றில் நம்பகத்தன்மை இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 15 அன்று வெளியான மேற்கூறிய தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை என்று ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் இணை பேராசிரியரும், பொருளாதார வல்லுநருமான இமான்சு கூறியுள்ளார்.�,