ஊரடங்கில் ஜாலியாக ஊர் சுற்றுபவர்களிடம் காட்டும் கெடுபிடியை விவசாயிகளிடமும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வியாபாரிகளிடமும் காட்டுகிறது காவல் துறை.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியில் காய்கறி எடுத்துச் சென்ற கார்த்தியை காவல் துறையினர் பிடித்து வைத்துக்கொண்டு கெடுபிடி செய்தனர். இதனால் விரக்தியடைந்த கார்த்தி காய்கறிகளையும், கீரையையும் டிஎஸ்பியின் வாகனத்தின் முன்பாக சாலையில் கொட்டிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார்த்தியின் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்டார் எஸ்.பி அரவிந்தன். இந்த நிலையில் இதேபோன்ற சம்பவம் பெரம்பலூரிலும் நிகழ்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட தலைநகரிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் வடக்குமாதவிப் பகுதியில் ’எள்’ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார் விவசாயி கருணாநிதி . எள்ளை மூட்டையில் பிடிப்பதற்காக சாக்கு, முறம், துடைப்பம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நேற்று (ஏப்ரல் 15) டூவீலரில் போகும் போது, பெரம்பலூர் காமராஜர் சிலை அருகில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் வாகனத்தை பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்கள்.
விவசாயி கருணாநிதி திமுக முன்னாள் எம்.பியும், எம்.எல்.ஏவுமான, ஜே .எஸ் ராஜூவின் மகன். எனினும், தன்னுடைய அடையாளத்தை கடைசி வரை காட்டிக்கொள்ளாமல் தன்னை விவசாயி என்றே காவல் துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று காலை எஸ்.பி. நிஷா பார்த்திபனை தொடர்பு கொண்டு விபரங்களை கூறியுள்ளார். அதற்காக கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.பி, டி.எஸ்.பியைப் பார்த்து வண்டியை வாங்கிக்கொள்ளச் சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து கருணாநிதி டி.எஸ்.பி கென்னடியை சந்தித்ததும், “எஸ்.பி பேசினாங்க, போலீஸ் தெரியாமல் செஞ்சுட்டாங்க. நீங்க போய் காட்டு வேலையை பாருங்க’’ என்று கூறி வாகனத்தை எடுத்து கொடுத்திருக்கிறார்.
இத்தனைக்கும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் அரசு எந்த தடையும் போடவில்லை. அப்படியிருக்க விவசாயிகளிடம் காவல் துறை ஏன் இத்தனை கெடுபிடிகளை காண்பிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் மக்கள்.
**எம் பி. காசி**�,