bவிக்ரமுக்கு தேவை ஒரு கமர்ஷியல் ஹிட்!

Published On:

| By Balaji

த்ரில்லர் ஜானரில் படங்கள் இயக்குவது இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பாணியாக உள்ளது. இவரது முதல் படமான டிமாண்டி காலனி திரைப்படம் ஹாரர் த்ரில்லர் பாணியில் வெளியாகி கவனம் பெற்றது. சில மாதங்களுக்கு முன் நயன்தாரா பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படம் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி மிகப் பெரியளவில் வரவேற்பு பெற்றது. அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி ஆகியோர் அந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இவர் இயக்கவுள்ள அடுத்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

விக்ரம் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். ராஜேஷ் எம் செல்வா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் மாவீரர் கர்ணா படத்தில் இணையவுள்ளார். அதன் பின் அவர் அஜய் ஞானமுத்துவின் படத்தில் நடிக்கவுள்ளார்.

டிமாண்டி காலனி படம் வெளிவந்த பின்பு 2016ஆம் ஆண்டிலேயே அஜய் – விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாக இருந்தது. ஆனால் அப்போது அது கைகூடவில்லை. இருவரும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ச்சியாக வணிக ரீதியான வெற்றியைப் பெற முடியாமல் இருந்த போது இருமுகன் அவரது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து வந்த ஸ்கெட்ச், சாமி 2 ஆகிய படங்களும் கவனம் பெறாமல் போனதால் விக்ரம் தற்போது வசூல் ரீதியாக வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கடாரம் கொண்டான், மாவீரர் கர்ணா, மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள படம் ஆகிய மூன்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel