சேவைகள் ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) ஜூலை – செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்க நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கிமயத்தால் பலரது வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் ஏற்றுமதியில் அதிகரிக்கும் வாய்ப்புகளாலும் புதிய ஒப்பந்தங்களாலும் இத்துறை வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 5,191 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என்று சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் வருவாய் 4,739 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
அதேபோல, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் 2,728 மில்லியன் டாலரிலிருந்து 2,906 மில்லியன் டாலராகவும், விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 2,014 மில்லியன் டாலரிலிருந்து 2,028 மில்லியன் டாலராகவும் அதிகரிக்கும் என மதிப்பீட்டு நிறுவனமான *இக்ரா*வின் மதிப்பீடுகள் கூறுகின்றன. இக்ராவின் கணிப்புப்படி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் துறை 2018 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் 9 முதல் 12 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கான வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 35,000 பேர் இத்துறையில் புதிதாக இணைந்துள்ளனர். சென்ற 2017-18 முழு ஆண்டில் 93,500 பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றிருந்ததாகவும் இக்ராவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.�,