இந்து மகாசபை தலைவர் வீர் சாவர்க்கர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஆக்டோபர் 20ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, “வீர் சாவர்க்கரின் உருவப்பட்த்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைத்துள்ளார். ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர். அப்போது வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார். கடிதத்தில், ‘நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன். என்னை சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள். உங்கள் கால்களை தொட்டு மன்றாடுகிறேன். தயவு செய்து என்னை விடுதலை செய்யுங்கள்’ என்று சாவர்க்கர் கூறியிருந்தார். அவர் ஒன்றும் வீரர் அல்ல” என ராகுல் பேசியிருந்தார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றவை அதிகம் பயன்படுத்தும் இந்துத்துவா என்ற வாக்கியத்தைப் பிரபலப்படுத்தியவராக அறியப்படும் சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதற்கு அப்போதே கண்டனம் எழுந்தன.
இந்நிலையில், சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்துக்கு சாவர்க்கரின் பேரன் ரஞ்ஜித் சாவர்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா காவல் நிலையத்திலும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆங்கிலேயேர்களிடம் சாவர்க்கர் மன்னிப்பு கோரியதாக தவறான தகவலை ராகுல் தெரிவித்துள்ளார் என்று தனது புகாரில் ரஞ்ஜித் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “சாவர்க்கர் மன்னிப்பு கோரியதாக ராகுல் கூறியுள்ளது தவறானது. ஆங்கிலேயர்களால் 27 ஆண்டுகள் சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்டார்” என்று கூறியுள்ளார்.�,