சிஏஏவுக்கு ஆதரவானவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக முதல்வரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக பொதுச் செயலாளர்கள் கே.எஸ்.நரேந்திரன், கருப்பு முருகானந்தம் மற்றும் வினோஜ் ஆகியோர் நேற்று (பிப்ரவரி 3) நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் மீது தாக்குதல் நடப்பதாகவும், தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திரன், “சிஏஏவுக்கு ஆதரவாக யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் பாஜக ஒன்றிய நிர்வாகி விஜயரகு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் சிஏஏவுக்கு ஆதரவாக ஒரு வாரத்துக்கும் மேலாக பிரச்சாரம் செய்து வந்தார். விஜயரகுவின் கொலையை லவ் ஜிகாத்தின் ஒரு பகுதி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தவர்,
“இத்தனைக்கும் மேலாக தமிழகத்தின் துணை முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது கம்பத்தில் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. ஒரு எம்.பி மீது தாக்குதல் நடத்தக்கூடிய தைரியத்தை இவர்களுக்கு யார் அளித்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, “சிஏஏவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது, எதிர்ப்பவர்கள் மீது பெரும்பான்மை சமூகத்தினர் எதிர்த் தாக்குதல் நடத்தினால் என்ன ஆகும்” என்று கேள்வி எழுப்பிய நரேந்திரன், “தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக முதல்வர் கூறிவருகிறார். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை கலவரபூமியாக மாற்றத் திட்டமிட்ட சதி நடந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுக்க வேண்டுமென முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். எங்கள் கோரிக்கையை உடனே கவனத்தில் எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.�,