2017-18 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.75 சதவிகிதம் முதல் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : 2017-18ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.75 – 7.5 சதவிகிதமாக இருக்கும். இதன் மூலம் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா தக்க வைத்துக்கொள்ளும். மேலும், தொழிலாளர் வரி தொடர்பான சீர்திருத்தங்களை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி, தோல் தொழில்துறையில் உலக அளவில் போட்டியிட முடியும்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிந்தைய மதிப்பீடாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக நடப்பு 2016-17 ஆம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய வளர்ச்சி கடந்த 2015-16ஆம் நிதியாண்டில் 1.2 சதவிகிதமாக இருந்தது. இது நடப்பு 2016-17 நிதியாண்டில் 4.1 சதவிகிதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சி கடந்த 2015-16 ஆம் ஆண்டில், 7.4 சதவிகிதமாக இருந்தது. இது 2016-17ஆம் ஆண்டில் 5.2 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.’ இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.�,