புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான முடாசிரின் கூட்டாளி சஜ்ஜத்கான் டெல்லி சிறப்புக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திலுள்ள அவந்திபோராவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகளவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டிவந்து மோதியதில், வீரர்கள் சென்ற வாகனம் சுக்குநூறானது. இதில் 44 வீரர்கள் மரணம் அடைந்தனர். அடில் அகமது தர் என்ற நபர் இந்த காரை ஓட்டிவந்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
தாக்குதலுக்காகப் பயன்படுத்திய வாகனம் மற்றும் வெடிபொருட்களை ஏற்பாடு செய்தது ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த முடாசிர் அகமத் கான் என்பது கண்டறியப்பட்டது. கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று நடத்தப்பட்ட என்கவுண்டரில் முடாசிர் பலியானார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் முடாசிர் உடன் இணைந்து செயலாற்றியவர் சஜ்ஜத் கான். காஷ்மீரைச் சேர்ந்த இவர், டெல்லியில் சால்வை விற்பனையாளராக இருந்து வந்தவர். இவரது இரண்டு சகோதரர்களும் கூட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய மோதலில் இவர்கள் கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதல் நிகழ்ந்ததும், சஜ்ஜத் கான் டெல்லி திரும்பியதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதோடு முடாசிர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி யாசிர் உடன் அவர் போலி தொலைபேசி எண்களைப் பயன்படுத்தித் தொடர்புகொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று (மார்ச் 21) இரவு சஜ்ஜத் கான் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டார். டெல்லி சிறப்புக் காவல் படையினர் இவரைக் கைது செய்துள்ளனர்.�,