bபுதிய பாடத்திட்டம்: அரசாணை வெளியீடு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு 2020 – 2021ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கல்வியாண்டிலேயே அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். 2018-19ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கும், 2019 – 20ஆம் கல்வியாண்டில் 2, 7, 10, 12ஆம் வகுப்புகளுக்கும், 2020 – 21ஆம் கல்வியாண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, 2018 – 19ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2, 7, 10, 12ஆம் வகுப்புகளுக்கான பாடநூல் தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் முடிவடையுள்ளது. 2020 – 21ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் இந்த கல்வியாண்டிலேயே (2019-20) நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த வகுப்புகளுக்கான முதல் பருவத்துக்கான பாடநூல்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்கப்படும். இதற்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, அதன் வடிவமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. முதல் பருவம் முடிந்து ஒரு மாதத்துக்குள் இரண்டாம் பருவப் பாடங்களுக்கான குறுந்தகடுகளும் தயாரிக்க முடியும்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாற்றிக்கொள்ள 2 அல்லது 3 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் நிலையில், 8 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை ஒரே ஆண்டில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்துகிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share