நடிகையும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல மலையாள இயக்குநர்களில் ஒருவரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கம் மூலம் தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி தொடங்கி வைத்தார். அதன்பின் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பகிர்ந்து வருகின்றனர். நடிகையும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த மீ டூ இயக்கத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் மலையாள இயக்குநரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். “ஹரிஹரன் இயக்கிய பழசி ராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடமாக இருந்தாலும் மம்முட்டிக்கு மனைவி வேடம். பூஜையிலும் கலந்து கொண்டேன். பூஜை நடந்த அந்த நாளில் இருந்து சில நாட்களுக்குப் பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று இருந்தேன். காலையில் போய் இறங்கியதும் ஹரிஹரனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. மாலை சந்திக்கலாம் என்று கூறி இருந்தார்.
நான் அன்றைக்கு மாலையே சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் ‘நிகழ்ச்சி முடித்து விட்டு சென்னை கிளம்பும் வழியில் நானே வந்து பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னேன். இல்லை இன்று இரவு தங்குங்கள். நான் இங்கே வந்ததே உங்களைப் பார்க்கத்தான்’ என்று சொன்னார்.
என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில் இருந்து வந்ததோ அத்தனையையும் செய்தியாக அனுப்பி விட்டு கிளம்பி வந்துவிட்டேன். இப்போது சிலர், ‘அவர் பெரிய ஆள்; அவரை பத்தியெல்லாம் ‘மீ டூ’வுல பேசாதீங்க’ன்னு சொன்னாங்க. ‘ஏன் பேசாம இருக்கணும்? பெரிய ஆளுங்கன்னா அப்படி இப்படிதான் நடந்துப்பாங்கன்னு சொல்லிட்டிருந்ததெல்லாம் மலையேறிடுச்சு. அன்னிக்கு எனக்கான ஒரு வாய்ப்பு பறிபோச்சு இல்லையா. அதனால் நான் பேசியே ஆகணும்னுதான் இதைச் சொல்றேன்” என்று கூறியிருக்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கும் பழசி ராஜா படத்தில் சரத்குமார், மம்முட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். பல விருதுகளைக் குவித்ததோடு பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது. இயக்குநர் ஹரிஹரன் மலையாளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், மூன்று முறை தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,