திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவில், 8,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 14ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவாக, வரும் 23ஆம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடைதிறக்கப்பட்டுச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்பு, 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் ஏற்றுவதற்குப் பயன்படும் கொப்பரை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக, 3,500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் நிலையில் உள்ளன. கோயில் முழுவதும் ஐந்து டன் ரோஜா,சாமந்தி பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தீபத் திருவிழாவில் 25 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வருவதற்கு எளிதாக, 2,600 சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள் என 8,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவலர்கள் மற்றும் பக்தர்கள் செல்போன் கொண்டுவர அனுமதி கிடையாது. இரண்டு ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கோயிலில் 103 இடங்களிலும் கிரிவலப்பாதை முழுவதும் 113 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர உதவிக்காக 21 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
**விளக்கு**
தீப திருவிழாவையொட்டி அன்னம் விளக்கு, மயில் விளக்கு, பிள்ளையார் விளக்கு, தேர் விளக்கு, லட்சுமி விளக்கு , சரஸ்வதி விளக்கு, மேஜிக் விளக்கு என 50 மேற்பட்ட வகையில் தயாரிக்கப்பட்ட விளக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. ஒரு விளக்கு 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.�,