தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடையாமல் அதே நிலையில் நீடித்து வருவதால், சென்னை மற்றும் வடமாவட்டங்களில் இன்றும் நாளையும் பெருமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மையம் கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் விட்டு விட்டுப் பெய்த மழை, நேற்று விடாமல் தொடர்ச்சியாக பெய்தது. நேற்று மிதமான மழை பெய்த நிலையில், இன்று (நவம்பர் 22) காலையில் இருந்து தொடர் மழை பெய்துவருகிறது.
இது தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன். நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவி வந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்துள்ளது. இது வடமேற்கு பக்கம் நகர்ந்து தமிழகத்தின் உள் பகுதியில் நிலவி வருகிறது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகச் சோழவரம் மற்றும் மாதவரம் பகுதியில் தலா 12 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாகவும் மற்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழுக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. பெருமழையை பொறுத்தவரை விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை முதல் மிகப் பெருமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு பெருமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார் பாலசந்திரன்.
மேலும் பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரைத் தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் 26 சதவீதம் மழை பெய்துள்ளது. இந்த காலத்தில் வழக்கமாக 38 சதவீததம் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 12 சதவீதம் குறைவாகும். சென்னையைப் பொறுத்தவரை 31 சதவீதம் மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 66 சதவீதமாகும். எனவே இந்த ஆண்டு 45 சதவீதம் குறைந்துள்ளது. நேற்று இது 60ஆக இருந்தது. இன்றும் மழை பெய்யும் என்பதால் இது நாளையே மாற வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சோழவரத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் 10 செ.மீ. மழையும், சென்னை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 9 செ.மீ. மழையும், தாம்பரம், திருத்தணியில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
**விடுமுறை**
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக் கழகத் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சட்டக்கல்லூரி தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையை தொடர்ந்து, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகளைக் கண்காணிக்க மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.
**புதுச்சேரியில் கடல் சீற்றம்**
புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பெருமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. பெருமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீர் தேங்கிய பகுதிகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுச்சேரியை அடுத்த பொம்மையார்பாளையத்தில் கடல் சீற்றம் காரணமாகப் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
கடல் சீற்றத்தில் இருந்து கிராமத்தை பாதுகாக்க வலியுறுத்தி, இன்று ஈசிஆர் சாலையில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.�,”