மக்கள் நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டு மாற்று சரித்திரத்தை உருவாக்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் விழுப்புரம் மற்றும் ஆரணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் தவறு செய்தால் உடனடியாக அவரை ராஜினாமா செய்ய வைப்போம் என்று கூறிய கமல்ஹாசன், ”நாங்கள் பணப்பட்டுவாடா செய்ய மாட்டோம். ஆனால் 5 வருடம் கழித்துப் பார்த்தால் நாங்கள் உங்களுக்காக கொடுத்தது அதைவிட பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்.
அவர்கள் கொடுப்பது உங்கள் பணம்தான் என்றாலும் கூட, ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை வாங்காதீர்கள். நல்ல கட்சிக்கு ஓட்டு போடுங்கள். விழுப்புரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பொய்யாமொழியை வெற்றிபெறச் செய்யுங்கள். அதேபோல ஆரணி தொகுதியில் போட்டியிடும் சாஜியையும் இந்தக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கிறேன். இருவரும் டெல்லிக்கு சென்று தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வார்கள். இது புரட்சியின் ஆரம்பம் என்று எண்ணிக்கொள்ளுங்கள்” என்றார்.
முன்னதாக நேற்று (மார்ச் 30) ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து சனிக்கிழமை காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கமல் பிரச்சாரம் செய்தார். அங்குப் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு படப்பை வந்த கமல்ஹாசன் பொதுமக்கள் யாரும் கூடாததால் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார். மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கடந்த வாரங்களில் கட்சியை விட்டு விலகிய நிலையில், மநீம சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த ஒய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர் விருப்ப மனுவுக்காக கட்டிய பத்தாயிரம் ரூபாயில் ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதியைக் கொடுக்கச் சொல்லி கமலுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.�,