திருச்சி லலிதா ஜுவல்லரியில் அக்டோபர் 2ஆம் தேதி, அதிகாலை 3.00 மணியளவில் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பளவில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திருவாரூரைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடைகளிலோ அல்லது வீட்டிலோ கொள்ளை போவதை தடுக்க, கடை உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள் உள்ளிட்டோரை அழைத்து காவல் துறையினர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்டிலுள்ள, சென்னை புறநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கடைகளில் கொள்ளை போவதை தவிர்ப்பது என்பது உள்ளிட்ட பல அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் நம்மிடம் பேசியபோது, “கடைகளில் கொள்ளை போவதை தடுக்க அறிவுரைகள் வழங்கினர். ஆனால், காவல் துறை ரோந்து வாகனங்கள் சரியான நேரத்தில் ரோந்து சென்றாலே கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்டுபிடித்து கொள்ளையை தடுக்க முடியும். இரவு நேரங்களில் ஒருமுறைதான் போலீஸ் ரோந்து வாகனங்களை பார்க்க முடிகிறது. மணிக்கு ஒருமுறை ரோந்து சென்றால் இரவு நேரக் கொள்ளைகளை தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீசார் தரப்பில் பேசியபோது, “ரோந்து வாகனங்கள் சரியாகவே சென்றுகொண்டிருக்கின்றன. ஏனெனில் ரோந்து செல்லாமல் இருக்க முடியாத வகையிலேயே அவர்களது வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திலும் தாங்கள் சென்ற இடங்கள் குறித்து ரோந்து போலீசார் குறிப்பிட வேண்டும். எனவே, இதனை ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அனைவரும் விழிப்புணர்வாக இருந்தால் மட்டுமே கொள்ளையைத் தடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.
நகைக்கடை உரிமையாளர்களுக்கு காவல் துறை தரப்பிலிருந்து சில அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
*நகைக் கடையின் உள்ளே முக்கிய பகுதிகளிலும் சுற்றுப் புற வளாகத்திலும் காட்சி அமைப்புடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். சில கேமராக்கள் வெளியே தெரியும்படியும் (இதனால் கொள்ளையர்கள் தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை உணர்வார்கள்) பிற கேமராக்களை வெளியே தெரியாத வகையிலும் வைக்க வேண்டும். கேமரா வேறோரு இடத்திலும் இருப்பதால் கொள்ளையர்கள் கேமராவை அப்புறப்படுத்தி தடயங்களை அழிக்கவே வாய்ப்பில்லாமல் போகும்.
*நகைக்கடைகளில் பணியமர்த்தப்படும் பணியாளர்களின் குணநலன்கள், நடத்தை பின்னணி அவர்களது ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, கை பேசி எண்ணின் உண்மைத் தன்மை ஆகியவற்றை கடையின் பாதுகாப்பு அலுவலர் ஆராய்ந்து அறிதல் வேண்டும்.
*தனியார் பாதுகாப்பு பணியாளர்களை நகைக் கடைகளில் பணியமர்த்தி பாதுகாப்பை உறுதிசெய்வது மற்றும் கடை ஊழியர்கள் விழிப்புடன் செயல்படுவது குறித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம். ஒருவழிப் பார்வை கண்ணாடியை கடையில் அமைக்கும் பட்சத்தில், கடையினுள் நபர்கள் இருப்பது வெளியிலிருந்து நோட்டமிடும் கொள்ளையனுக்கு தெரியவே வராது.
*நகைக்கடை மூடப்பட்ட நேரத்தில் கடையை கொள்ளையடிக்க முயற்சிப்பதை தடுக்க, தொலை இயக்கி எச்சரிக்கை அலாரத்தை நிறுவ வேண்டும். பண்டிகை நாட்கள் மற்றும் பொருள் இருப்பு அதிகம் இருக்கும் நாட்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்தலாம்.
*கடை திறக்கும் சமயத்தில் சந்தேகத்திற்கிடமான தனி நபரோ அல்லது வாகனமோ கடையின் அருகிலோ அல்லது சுற்றியுள்ள இடங்களிலோ நிற்பதை அல்லது நடமாடுவதை அறியும் பட்சத்தில், அவர்கள் அறியாமல் காவல் துறைக்கு தெரியப்படுத்தவும்.
*கடைக்கு சரக்குகளை கொண்டு வரும் நபர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் அடையாளம் அறிந்திருக்க வேண்டும்.
*கடையினுள் யாரேனும் நுழையும்போது எச்சரிக்கை ஒலிப்பான் அல்லது காலிங் பெல் அடிக்கும்படி ஏற்பாடு செய்யவும். கடையினுள் உள்ள ஊழியர்களை வெவ்வேறு நேரங்களில் உணவருந்த அறிவுறுத்தவும். அதன்மூலம், குறைந்த வேலையாட்கள் உள்ள நேரத்தை அறிந்துகொள்ள இயலாது.
*வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்படும் நகைகள் வலுவூட்டப்பட்ட கண்ணாடியால் ஆன அலமாரியில் வைப்பதன் மூலம் கண்ணாடியை உடைத்து கொள்ளையடிப்பதை தவிர்க்க முடியும்.
*ஒரு குறியீட்டு வார்த்தையோ அல்லது சொல்லோ கடையின் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். யாரேனும் சந்தேகத்திற்கிடமான நடத்தையை வெளிப்படுத்தினால் அந்த குறியீட்டை பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
*நகைக்கடையில் இருக்கும் விலையுயர்ந்த வைரங்கள் மற்றும் கைக் கடிகாரங்களை காட்சிக்கு வைப்பதை தவிர்க்கலாம்.
*கடையின் உரிமையாளரோ அல்லது ஊழியரோ கடையை தனியாக மூடவோ திறக்கவோ கூடாது. அந்த நேரத்தில் மற்றொரு ஊழியர் பாதுகாப்பான தொலைவில் கடையின் கதவை பார்வையிடும் வகையில், கைபேசியுடன் நின்று கவனிப்பதன் மூலம் அபாய நேரங்களில் காவல் துறையை நாட இயலும்.
�,”