தலித், அரிஜன் போன்ற வார்த்தைகளை அரசுத் துறைகளில் பயன்படுத்த கேரள அரசு தடை விதித்துள்ளது.
கேரள அரசின் பல துறைகளில் தலித் மற்றும் அரிஜன் என்ற வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளன. இதேபோல் தலித்களைக் குறிக்கும் ‘கீழாளர்’ என்னும் மலையாள வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்த வார்த்தைகள் தங்களைப் புண்படுத்துவதாகவும் தனிமைப்படுத்துவதுபோல் உள்ளதாகவும் அந்த இன மக்கள் வேதனை தெரிவித்திருந்தனர். எனவே அரசுத் துறைகளில், தலித், அரிஜன் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பாக பல்வேறு துறைகளுடன் அரசு ஆலோசனை நடத்திவருகிறது.
இந்நிலையில், தனது துறை சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான தகவல்களில் அந்த இரு வார்த்தைகளைப் பயன்படுத்த கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தடை விதித்துள்ளது. அம்மாநிலத்தின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆணையத்தின் தலைவர் பி.என். விஜயகுமார் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம், “கடந்த 2008ஆம் ஆண்டே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது சமூக புறக்கணிப்பிற்கே வழிவகுக்கும். ஒரே தேசம் என்ற உணர்வை இது அழிக்கும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுச் சமீபத்தில் கீழாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அரசின் இந்த முடிவு தலித் செயல்பாட்டாளர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. இது தொடர்பாக தலித் செயல்பாட்டாளரான அஜய் குமார் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம், “தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் போன்ற வார்த்தைகள் நிர்வாக ரீதியிலானவை மட்டுமே. தலித் என்ற வார்த்தை மூலம் எங்களை அடையாளப்படுத்தவே விரும்புகின்றோம். தலித் என்ற வார்த்தை அனைவருக்கும் பொதுவானது, அம்பேத்கர் மற்றும் மகாத்மா பூலே போன்றோர் பயன்படுத்திய சொல் அது. தலித் என்பது குற்றச் சொல் அல்ல. தலித் எனக் குறிக்கப்படுவதன் மூலம் பெருமை அடைகிறோம். அதேவேளையில், தலித்களைக் குறிப்பிடுவதற்காக மகாத்மா காந்தி பயன்படுத்திய அரிஜன் என்ற வார்த்தையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.�,