விமானத்தில் பாஜக ஒழிக என கூச்சலிட்டு தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இன்று (செப்டம்பர் 3) காலை விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அதே விமானத்தில் சோஃபியா என்ற பெண்ணும் பயணித்துள்ளார். தமிழிசையை பார்த்ததும் பாசிச பாஜக என்று சோஃபியா கோஷமெழுப்பியுள்ளார். இதனால், தமிழிசை உட்பட சக பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விமானம் தரையிறங்கியதும் சோஃபியாவுடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜகவுக்கு எதிராக எப்படி நீங்கள் விமானத்தில் கூச்சலிடலாம்? விமானம் ஒரு பொது இடம், அதில் எப்படி பாசிச பாஜக ஒழிக என்று நீங்கள் கூறலாம்” என்று தமிழிசை கேள்வி எழுப்பினார். கூச்சல் எழுப்ப தனக்கு உரிமை உள்ளதாக சோஃபியாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், விமான நிலைய காவல்நிலையத்திலும் தான் பயணித்த விமான நிறுவனத்திடமும் சோஃபியா மீது புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “ கூச்சலிட்ட பெண் எதாவது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது எனது சந்தேகம். அவர் சாமானிய பயணியைப் போல் நடந்துகொள்ளவில்லை. அவர் கூச்சலிட்டதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், சக பயணிகளுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது. வெளியே வந்து என்ன வேண்டுமானாலும் கூச்சலிடலாம்” என்று தெரிவித்தார்
கனடா நாட்டில் ஆராய்ச்சிப்படிப்பை முடித்துள்ள சோஃபியா பெற்றோருடன் நாடு திரும்பியபோது, விமானத்தில் வைத்து பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வைத்து சோஃபியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சோஃபியா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.�,