வரும் ஜூன் 12ஆம் தேதியன்று, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் சந்திப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூரின் கூர்க்கா படை பாதுகாப்பு அளிக்கவுள்ளது.
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, கடந்த சில மாதங்களாக பனிப்போர் நீடித்து வந்தது. வடகொரியா நடத்திவந்த அணு ஆயுதச் சோதனைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் வடகொரிய மற்றும் தென்கொரிய அதிபர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இது, வடகொரியா மீதான அமெரிக்காவின் பார்வையை மாற்றியது.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பன்முஞ்சோம் பகுதியில், இரு நாட்டு அதிபர்களான கிம் ஜோங் வுன்னும் மூன் ஜே இல்லும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 12ஆம் தேதியன்று இனி அணு ஆயுத சோதனை நடத்தப்படாது என வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரவேற்றிருந்தார். விரைவில், கிம் ஜோங் வுன்னைச் சந்திக்க ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் ஜூன் 12ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் ட்ரம்ப் – கிம் சந்திப்பு நடைபெறுமென அறிவித்துள்ளது அமெரிக்கா. இதனை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ். தனது தேசிய பாதுகாப்புக் குழுவிடம் இருந்து, வடகொரியா பற்றிய தகவல்களைத் தினமும் ட்ரம்ப் பெற்று வருவதாக, அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் வரும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் வுன் ஆகியோருக்கு, அவர்களது தனி பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது சந்திப்பு நடக்குமிடம், இரு அதிபர்களும் தங்கும் விடுதிகள் மற்றும் சாலைகளில் பாதுகாப்பு அளிக்க, சிங்கப்பூரிலுள்ள கூர்க்கா படையினரைப் பணிக்கு அமர்த்தியுள்ளது அந்நாட்டு அரசு. சிங்கப்பூருக்கு வருகைதரும் அரசு விருந்தினர்களுக்கு, இப்படையினரே பாதுகாப்பு அளிப்பது வழக்கம். சமீபத்தில் நடந்த ஷாங்கிரி லா உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டபோது கூட, கூர்க்கா படையினரே பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,