தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக் கடலின் வடகிழக்கு மற்றும் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அதேபோல அரபிக்கடலின் தென் கிழக்குப் பகுதியில் தெற்கு கர்நாடகா முதல், வட கேரளம் பகுதி வரை மேல் அடுக்கு சுழற்சி உள்ளது. அதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.
வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக நிலப்பகுதிகளிலும் வட மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் 12ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்யும் எனவும் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளி மண்டலத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும், வெப்பச் சலனத்தாலும் இன்றும் (ஆகஸ்ட் 9) தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்று மாலை பரவலாக மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான, தென்மேற்குப் பருவ மழையின் இரண்டாம் கட்ட மழைக் கணிப்பை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதில் நாடு முழுவதும், இரு மாதங்களிலும் சராசரியாக, 43.5 செ.மீ., மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவை விட 38 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
�,