சர்கார் கதை தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.
சர்கார் படத்தின் கதை சர்ச்சையின் போது வருண் ராஜேந்திரன் எழுதிய செங்கோல் கதையும், சர்கார் படத்தின் கதையும் ஒன்று என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டார். உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது பாக்யராஜின் நிலைப்பாடு கருத்தில் கொள்ளப்பட்டது. இதனாலே சன் பிக்சர்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பினர் வருண் ராஜேந்திரனோடு சமரசம் செய்துகொள்ள முன்வந்தனர்.
சர்கார் கதை பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் பாக்யராஜின் நிலைப்பாடு உதவி இயக்குநர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்கார் பிரச்சினையில் நியாயமாக நடந்துகொண்டதற்காக சில அசௌகரியங்கள் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். சங்க நலன் கருதி அதை வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தான் போட்டியிடாமல் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்றும், தற்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.�,