�
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள சஞ்சு படத்துக்கு எதிராக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சஞ்சு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. அந்த அளவிற்கு நடிகர்களின் நடிப்பு, தொழில்நுட்பம் என அனைத்திலும் சிறப்பாக அமைந்துள்ளது சஞ்சு திரைப்படத்தின் முன்னோட்டம்.
மேலும் மும்பையில் 1993ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு துப்பாக்கியைப் பதுக்கிவைத்து உதவியதாக சஞ்சய் தத்துக்கு எதிராகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிகழ்வு சஞ்சு திரைப்படத்தில் ஒருசில காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு காட்சியில் கழிவறை நிரம்பி வழிவது போல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்சி மூலம் சிறைச்சாலை மோசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் பிரித்வி மஸ்கி என்பவர் புகார் அளித்துள்ளார். இதனால் மக்களுக்கு சிறை மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் மீதும் தவறான புரிதல் ஏற்படும் என்பதால் இந்தக் காட்சிகள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்குக் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் பிரித்வி மஸ்கி எச்சரித்துள்ளார்.�,