கிறிஸ்டபர் நோலான் படங்கள் என்றாலே இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா காலத்திலும் இவரது திரைப்படத்தின் கதை நகரும்.இவரது எல்லா திரைப்படங்களும் ஒரு உளவியல் சார்ந்தே இருக்கும். 1998 இல் வெளிவந்த Following தான் இவரது முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எங் மேன் என்ற கதாபாத்திரம் வேலையில்லாத ஒரு எழுத்தாளனாவார். தன் நாவலுக்காக ஒரு முன் பின் தெரியாத சிலரை அவர் பின் தொடர்கிறார். அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நீளமான கோட் அணிந்த ஒருவர் தன்னை பின்தொடர்கிறார் என்று அவர் கண்டுபிடித்து விடுகிறார். பிறகு எங் மேனை பார்த்து நான் தான் காப் என்கிறார். நான் ஒரு திருடன் இனி நீ என் திருட்டுக்கு உதவ வேண்டும் எனச் சொல்கிறார். எங் மேனுக்கு ஒரு பெண்ணை பின் தொடரும் வேலையைத் தருகிறார் காப் . அந்தப் பெண் ஒரு சிறிய தாதாவின் காதலி. அந்தப் பெண்ணை பின்தொடரும் போது வரும் பிரச்சனையே `Following’ திரைப்படத்தின் கதை. ஆனால் மற்ற இயக்குநர்கள் போல் இல்லாமல் நோலான் தன் எல்லாப்படங்களையும் Non-Linear என்று சொல்லப்படும் பாணியில் திரைக்கதை அமைத்திருப்பார்.
பின்பு அதே பாணியை தன் எல்லாப் படங்களுக்கும் கொடுத்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இது இன்று நேற்று வந்த ஆசை இல்லை; கிறிஸ்டபர் நோலான் 1970 ஜூலை 30 ஆம் தேதி லண்டனில் பிறந்தார். தன் தந்தையான பெர்ன்டேன் ஜேம்ஸ் நோலான் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கிறிஸ்டபர் நோலான் தன் ஏழாவது வயதில் தன் தந்தையிடம் சூப்பர் 8 என்ற கேமராவை வாங்கிக் கொண்டு அப்போதே குறும்படங்களை எடுக்கத் தொடங்கினார். 1977இல் வெளிவந்த `Star Wars’ என்ற விஞ்ஞான திரைப்படம் நோலானை மிகவும் கவர்ந்தது. பின்பு தன் எட்டு வயதில் ஒரு அனிமேஷன் குறும்படத்தை இயக்கினார். இதற்கு உதவியாக தன் மாமா நாசாவில் அப்போலோ ராக்கெட்டுக்காக பணிபுரிந்து வந்தார். அவர் சில முக்கியமான காட்சிகளை நோலானுக்கு தந்தார். அதை வைத்து தன் முதல் அனிமேஷன் குறும்படமான `Space Wars’ என்ற குறும்படத்தை இயக்கினார். தன் 11 வயதில் ஒரு முழு திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
1998இல் `Following’ திரைப்படத்திற்குப் பிறகு 2000-த்தில் Memento என்ற உளவியல் சார்ந்த ஒரு த்ரில்லர் படத்தை இயக்கினார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கேற்ப அவரின் தம்பியான ஜோனாதன் நோலான் இன்று வரை கிறிஸ்டபர் நோலான் படத்திற்குத் திரைக்கதை எழுதித் தருகிறார். அப்படி முதலில் நோலான் பிரதர்ஸ் ஜோடி சேர்ந்த படம்தான் Memento. `Short Term memory Loss’! எங்கோ கேள்விப்பட்ட வசனமாகத் தெரிகிறதா?. ஆமாம். இந்தக் குறைபாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் Memento. தன் வாழ்க்கையில், முன்பு நடந்த எல்லா விஷயங்களையும் மறந்த ஹீரோ தன் மனைவி மரணத்திற்கு காரணமானவர்களைப் பழிவாங்க துடிக்கிறான். எல்லா விஷயங்களையும் மறந்த ஹீரோ எப்படி ஞாபகம் வைத்து எதிரியைக் கொல்ல முடியும் என்பதே கதை. எல்லோர் போலவும் திரைக்கதை அமைக்காமல் இந்தப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அதே குறைபாடு வரவேண்டும் என்று நோலான் Non-linear பாணியில் திரைக்கதை அமைத்தார். இந்தப் படம் பார்த்த எல்லோருக்கும் இத்திரைப்படத்தின் கதை புரியாத காரணம் அந்த Non-linear பாணிதான்.
இத்திரைப்படத்தைத் தழுவித்தான் தமிழில் `கஜினி’ திரைப்படத்தை எடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு அதை ஹிந்தியிலும் ரீமேக் செய்து, பாலிவுட்டில் முதன்முதலில் நூறு கோடி வசூல் செய்த படம் இதுவே. ஆனால் இதற்காக எந்த அனுமதியும் முருகதாஸ் தரப்பு பெறவில்லை என்பதே வருத்தம். `Batman’ சீரிஸில் கை வைத்த நோலான் பேட் மேனின் `The Dark Knight’ திரைப்படம் ஹாலிவுட் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமா ரசிகர்களை வியப்பில் அலற வைத்தது. வழக்கமாக சூப்பர் ஹீரோ படம் என்றால் ஹீரோவை கெத்தாக காட்டுவது; அவரை வைத்தே கதை நகர்த்தும் சினிமாக்களை பார்த்த நம் ரசிகர்களை “JOKER” என்ற வில்லன் கதாபாத்திரம் இன்று வரை வில்லன் என்றால் இவன் முகம் நம் கண் முன்னே வந்து போகும் அளவிற்கு அந்த ஜோக்கர் கதாபாத்திரம் ஒரு மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்தவர் Heath Ledger. இவருக்கு இத்திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப் பெற அன்று அவர் உயிருடன் இல்லை. ஆஸ்கார் விருதுக்காக வந்த எல்லோரும் Heath Ledger-காக கண்ணீர் கலங்கினர் . Heath Ledger இதற்கு முன்பு எத்தனையோ படம் பணியாற்றி இருந்தாலும் இந்தப் படம் தான் தன் வாழ்நாளையே புரட்டி போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 2010 இல் வெளிவந்த `Inception’ திரைப்படத்தின் மூலம் கனவு பற்றிய ஒரு மிகப் பெரிய விளக்கத்தை உலக மக்களுக்குத் தந்தார் நோலான். 8 வருட உழைப்புக்குப் பின் வந்த வெளிப்பாடுதான் Inception. அடுத்தவர் கனவில் சென்று ஒரு விஷயத்தை விதைப்பவர்தான் Inceptor. அந்த மாதிரி ஒரு மாபெரும் நபரின் கனவில் ஒரு பெரிய விஷயத்தை விதைப்பது தான் இந்த ஹீரோ டீமின் வேலை. இதன் பெயர்தான் Inception. இந்தப் படமும் Non-Linear வடிவில் தான் அமைத்திருப்பார் நோலான். இதன் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் பதினான்கு வருட உழைப்புதான் Interstellar.
ஒரு நீண்ட விண்வெளி பயணம் தான் இத்திரைப்படத்தின் கதை. சுவாரஸ்யமான திரைக்கதையில் உலக ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார் நோலான். எந்த ஹீரோக்கள் படமாக இருந்தாலும் அது தன் படம் தான் என்ற முத்திரையைப் பதித்த இவரின் வயது வெறும் 47 தான்.சென்ற வாரம் வெளிவந்த Dunkirk உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் உண்மை சம்பத்தை அடிப்படையாகக் கொண்ட படம். இரண்டாம் உலகப் போரில் டன்கிரிக் என்ற கடல் வெளியில் 4,00,000 அமெரிக்க படை வீரர்கள் மாட்டிக்கொண்டு எப்படி உயிர் தப்பினார்கள் என்ன நடந்தது என்பதை நோலான் பாணியில் பார்த்த அனைத்து உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது இத்திரைப்படம். அத்தகைய சிறப்புடைய இயக்குநர் கிறிஸ்டபர் நோலானின் பிறந்த தினம் இன்று( ஜூலை 30). அவருக்கு உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-ராஜ் குமார்
�,”