புரட்டாசி மாசம் அசைவ உணவு சாப்பிடக் கூடாது அப்படின்னு நினைத்தாலும், வாயைக் கட்ட முடியல. வீட்டில் இருந்தபடியே ஆன் லைன்ல பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்னு நினைத்தால், இரண்டு நாளுக்கு முன்பு வந்த செய்தி அதிர்ச்சியை கிளப்புது. தரமில்லாத பிரியாணிக்கு பிரபல பிரியாணி கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைச்சுருக்காங்க. குறிப்பாக, மட்டன் பிரியாணிதான் சரியில்லைன்னு சொல்லியிருக்காங்க. அதனால், இந்தக் கடையில பிரியாணி நல்லாயிருக்குமா, இருக்காதான்னு யோசனை பண்ண வேண்டியிருக்கு.
எதுக்கு வம்பு? கொஞ்சம் சிரமம் பார்க்காமல், நாமளே கறி கடைக்குப் போயி, மட்டன் வாங்கலாம் அப்படின்னு யோசிக்கலாம். ஆனா, மட்டன் எப்போ கட் பண்ணினாங்கன்னு நமக்குத் தெரியாது. எதுக்கு இந்த சந்தேகம். அதனால, நம்ம கண் முன்னாடியே ஒரு உயிருள்ள கோழியை கட் பண்ணி வாங்கிக்கிட்டு வந்து, நல்லா சுத்தம் செய்து நம்ம வீட்டுல நமக்கு பிடித்த மாதிரி, எந்தவிதமான, மசாலா கலவையும் சேர்க்காமல் பிரியாணி எப்படி செய்வதுன்னு இந்தவார சண்டே ஸ்பெஷலாக பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
உரித்த கோழிக் கறி (பெரிய துண்டாக) – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 3 டீ ஸ்பூன்
பட்டை – 5
லவங்கம்– 5
பிரியாணி இலை – 2
ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த் தூள் – 1/2 டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா – 2 டீ ஸ்பூன்
புதினா இலை – 1 கைப்பிடியளவு
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் உரித்த கோழிக் கறித் துண்டுகளை சுத்தமாகக் கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதன் பின், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை தனித்தனியே நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி சூடானதும், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
அதன்பின், இஞ்சி பூண்டு விழுது, புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை (சுமார் மூன்று நிமிடம் லேசான சூட்டில்) நன்கு வதக்கவும். அதனுடன் கோழிக் கறியை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின், அதில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி போட்டு விசில் போடாமல் வேகவிடவும். விசில் ஓட்டை வழியாக ஆவி வந்ததும் மூடியைத் திறந்து காரம், உப்பு சரியாக உள்ளதா எனப் பார்த்து, தேவையானதைச் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் ஊற வைத்த பிரியாணி அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு மிதமான சூட்டில் இரண்டு விசில் வரும் வரை (சுமார் 15 நிமிடம் வரை) வேகவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, குக்கர் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து நன்கு கிளறி பரிமாறவும்.
குறிப்பு
பாஸ்மதி அரிசி என்றால் ஒரு மடங்கு தண்ணீரும், சாதாரண அரிசிக்கு இரண்டு மடங்கு தண்ணீரும் வைக்கவும்.
இறுதியாக அரிசி வெந்து இரண்டு விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி குக்கர் மூடியைத் திறந்து பார்க்கும் போது தண்ணீர் இருந்தால் சிறிது நேரம் மிதமான சூட்டில் வேக விடவும்.�,”