மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, அக்கொள்கையின் முக்கிய அம்சங்களை தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில், தற்போது, எட்டாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதை மாற்றி, ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே ‘ஆல் பாஸ்’ திட்டம் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்ச்சித் திட்டம் குறித்து அதில், எட்டாம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுவதால் இந்த மாற்றம் செய்யப்படும். அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பாடங்களை கற்பிக்கலாம். அப்படிச்செய்தால், இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது மொழியை அரசியல் சட்டத்துக்குட்பட்டு மாநில அரசு தேர்வு செய்யலாம். பள்ளி, பல்கலைக்கழக அளவில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்கான வாய்ப்பு பரவலாக்கப்படும்.
அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும். கல்வித்துறையில் முதலீடு அதிகரிக்கப்படும். வெளிநாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைய ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அதில் புதிய கல்விக் கொள்கைபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.�,