ரயில்களின் ஏசி கோச்சுகளில் பயணிகளுக்குப் போர்வை வழங்குவதை நிறுத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய தணிக்கைக்குழு எனப்படும் சி.ஏ.ஜி. சமீபத்தில் ரயில்வே தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமாக இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், ரயில்வேயின் சேவைகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், ரயில்களில் சுகாதார வசதிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது. ரயில்களில் ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை பல மாதங்களாக துவைக்கப்படாமலேயே உள்ளதாகவும் சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து ரயில்வே தனது சேவையை மேம்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதேவேளையில், குறிப்பிட்ட சில ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்குப் போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏசி பெட்டிகளில் தற்போதுள்ள வெப்பநிலையான 19 டிகிரியை 24 டிகிரியாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல் ஒரு சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவதை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை மற்றும் படுக்கை விரிப்பைச் சுத்தப்படுத்த ரூ.55 செலவாகிறது. ஆனால், பயணிகளிடம் ரூ.22 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே நஷ்டத்தைச் சமாளிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ரயில்வே விதிமுறைப்படி இரண்டு மாதத்துக்கு ஒருமுறை போர்வை, பெட்சீட் போன்றவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், ஊழியர்கள் இதை முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால், பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இதைத் தவிர்க்க ரயில்வே கடந்த வருடம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்பு மற்றும் போர்வையை ஐ.ஆர்.சி.சி.டி. இணையதளம் மூலம் புக்கிங் செய்து, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் பெற்றுக்கொள்ளலாம். இதன்படி இரண்டு படுக்கை விரிப்புகள், ஒரு தலையணைக்கு ரூ.140 அல்லது ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.�,