Bஉள்ளே சுற்றும் சுற்றுலா!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி

மாநகர, நகர மனிதர்கள் என்றில்லை… கிராமத்து மக்கள்கூட இப்போது இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டார்கள். காரணம், விவசாயம் போன்ற இயற்கை தொடர்பான வேலைகளைவிட கிராமங்களிலும் இப்போது செயற்கைத்தனமான ஒரே மாதிரியான வேலை செய்யும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

காலையில் எழுந்து, குளித்து, கிளம்பி அவசரமாகப் புறப்பட்டு வேலை செய்யும் நிறுவனங்களுக்குச் சென்று, பகல் பொழுதை அங்கே முழுவதும் ஒப்படைத்துவிட்டு இருள் கவ்வியதும் மீண்டும் வீடு திரும்புதல் என்பதுதான் இயந்திர வாழ்வின் ஆரம்பம். இது, இப்போது கிராமங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதன் விளைவுதான் இயற்கை ததும்பும் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் பீறிட்டுப் பொங்குவதற்கான அடிப்படைக் காரணம். கிராமப்புறத்தைச் சார்ந்தவர்களும் இப்போது அதிகமாகக் கோடை வாசஸ்தலங்கள், அருவிகள் எனப் புறப்பட்டுவிட்டனர். ஏனெனில் கிராமங்களிலும் இயற்கையோடு நேரம் செலவழிக்கப் பலருக்கு இப்போது நேரம் கிடைப்பதில்லை.

சுற்றுலா என்றால் வெளியே சுற்றிப் பார்ப்பது மட்டும் அல்ல. அதன் மூலம் நம்மை நாமே சுற்றி, உற்றுப் பார்ப்பதும்தான்.

ஊட்டிக்கு ஒரு முறை சுற்றுலா சென்றபோது அங்கு வழிகாட்டிய நண்பர் பின்னிரவில் ஜீப்பில் ஏற்றி என்னை அழைத்துச் சென்றார். நானும் என் குழாமும் ஜீப்பில் சென்றோம். மலை முகடு. முழு இருட்டு. ஜீப் நின்றது. சார் எல்லாரும் இறங்குங்க என்றார். எல்லோரும் இறங்கினோம். செல்போனை எல்லாம் வண்டிக்குள்ள போட்டுருங்க என்றார். அதன்படியே போட்டுவிட்டோம். கும்மிருட்டு… வண்டினங்களின் சத்தமும் விலங்கினங்களின் சத்தமும் சேர்ந்து எங்கோ இருந்து புதியதொரு இயற்கை மொழியைப் பேசிக்கொண்டிருந்தன.

வெறும் உள்ளங்கை, புரட்டிப்போடுவது போன்ற காற்று… அப்போது நமக்கு தைரியமாய் இருப்பது அந்த ஜீப்பின் முன் விளக்குதான். இதை நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஜீப்பின் விளக்கையும் அணைத்துவிட்டார் நண்பர்.

அவ்வளவுதான்… குளிர், இருட்டு. இருட்டு என்றால் மின்சாரம் போனதும் வீட்டில் இருக்குமே அந்த இருட்டு அல்ல. ஒட்டுமொத்தப் பகுதியில் ஒரு வெளிச்சப் புள்ளிகூட இல்லை. அப்படிப்பட்ட அடர் இருட்டு. எங்கெங்கிருந்தோ வரும் விலங்கினங்களின் குரல், வண்டுகளின் சுழலிசை.

‘சார் பயமா இருக்கு லைட்டைப் போடுங்க’ என்றார் என்னோடு வந்த நண்பர் ஒருவர்.

வழிகாட்டி நண்பரோ ஜீப் விளக்கை ஒளிர வைக்க மறுத்துவிட்டார்.

‘சார் தனித்தனியா போய் அப்படியே கொஞ்ச தூரம் நடங்க. நாம யாருனு யோசிச்சுப் பாருங்க. ஊருல, ஆபீஸ்ல, வீட்ல நமக்கு பல அந்தஸ்து இருக்கலாம். ஆனா, இயற்கை முன்னாடி நாம ஒண்ணுமே இல்லைங்குறதை இந்த அஞ்சு நிமிஷம் உணர்த்தும்’ என்றார்.

நான் கேள்வி கேட்பதற்கு முன்பே, ‘தத்துவமெல்லாம் பேசலை. அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசுவோம்’ என்று அவரே முடித்துவிட்டார்.

அந்த அடர் இரவில் விண்மீன்கூட இல்லாத இரவில், முழுக்க முழுக்க இயற்கையோடு இருந்த அந்தச் சில நிமிடங்களில் வெளியே எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால், உள்ளே பார்க்க ஆயிரம் விஷயங்கள் இருந்தன. இயற்கையின் முன்னால் நாமெல்லாம் ஒரு வண்டு அளவுகூட முக்கியம் இல்லை என்பதை வண்டின் சுழலிசை உணர்த்தியது.

10 நிமிடங்கள் கழித்தே ஜீப்பில் ஏறி செல்போனைத் தொட்டு ஒவ்வொருவரும் உயிர்ப்பித்துக்கொண்டோம். மறுநாள் காலை அதே இடத்துக்கு ஜீப்பில் எங்கள் எல்லாரையும் அழைத்துச் சென்றார் வழிகாட்டி நண்பர்.

அங்கிருந்து பார்க்க மலை, காடு, பசுமை என இயற்கை அழகு நெஞ்சை அள்ளியது. இப்போது இதே இடத்திலிருந்து வெளியே பார்த்தோம். நேற்று இரவு இதே இடத்திலிருந்து உள்ளே பார்த்தோம். வெளிச்ச அழகு கண்ணைக் கவர்ந்தது. இருட்டு அழகு கற்பித்தது.

சுற்றுலாவின் நோக்கம் வெளியே பார்ப்பது மட்டுமல்ல, உள்ளே பார்ப்பதும்தான்!

**- ஆரா**

**

மேலும் படிக்க

**

**

[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)

**

**

[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)

**

**

[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share