உணவு வணிகர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று (டிசம்பர் 12) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, உணவு வர்த்தகர்கள் தங்களுக்கான உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம். எனவே, சிறு, குறு உணவு வணிகர்கள், உணவு விடுதிகள், 5 நட்சத்திர விடுதிகள் என உணவு வணிகம் செய்பவர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெற வேண்டும். இல்லையெனில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ரூ.5 லட்சம் வரை அபராதத்துடன், 6 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்குக் குறைவாக வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் ரூ.100 செலுத்தி பதிவுச் சான்றிதழை அந்தந்தப் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வணிகம் செய்யும் சிறு உணவு வணிகர்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். ரூ. 12 லட்சத்திற்கும் அதிகமாக வணிகம் செய்யும் வணிகர்கள் 2000 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். உணவுத் தயாரிப்பாளர்கள் ரூ.3 ஆயிரமும், 3 நட்சத்திர உணவு விடுதிகள் ரூ.5 ஆயிரமும் செலுத்தி மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து விண்ணப்பம் மற்றும் இணைப்பு ஆவணங்களை அந்தந்த மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் 15 நாட்களுக்குள் ஒப்படைத்து 60 நாட்களுக்குள் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை ‘நியமன அலுவலர் அலுவலகம், எண் 33, மேற்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15’ என்ற முகவரியிலும், 044 23813095 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
உணவு வணிகர்கள் தங்கள் வணிக உரிமத்தைப் பெறுவதற்கு உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று (டிசம்பர் 12) சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,