இளைஞர்கள் புதிய வழியில் போதைக்கு அடிமையாவதை தடுக்கவே இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையில் அகில இந்திய வானொலி வழியாக “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 29) மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இ-சிகரெட்டுக்கு தடை விதித்தது ஏன் என விளக்கினார்.
“புகையிலையில் ஆபத்து உள்ளது என்பது தெரியாமல் சில நேரங்களில் நமது இளைஞர்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். அதிலும் இ.சிகரெட் பிடிப்பதால் எந்த கெடுதலும் இல்லை என்ற தவறான எண்ணமும் அவர்களிடம் இருந்தது.
இ-சிகரெட்டில் பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்துவதால் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படும். இதன் தீமைகள் குறித்து மக்களுக்குத் தெரியாது. நாட்டின் இளைய சமுதாயம் புதிய வழி போதைக்கு அடிமையாவதை தடுக்கவே இ.சிகரெட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அனைவரும் புகைப்பிடிப்பதை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைப்பதோடு, இ.சிகரெட்டிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
இ-சிகரெட்டுகள் மற்றும் அதுபோன்ற தயாரிப்புகள் மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்குச் சுகாதார ஆபத்தை ஏற்படுத்துவதால், அதனைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.�,