bஇந்திய கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவு!

Published On:

| By Balaji

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கடந்த 2016-17 நிதியாண்டிலும் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவடைந்துள்ளது.

2016-17 நிதியாண்டின் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 3.6 கோடி மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 2.5 சதவிகிதம் சரிவாகும். மும்பையிலுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றிலும், ராஜஸ்தானிலுள்ள கரின் இந்தியா நிறுவன எண்ணெய் கிணற்றிலும் உற்பத்தி பெருமளவில் குறைந்ததால் நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மங்கலா பகுதியில் சில எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டதாலும், பக்யாம் பகுதியிலுள்ள கிணறுகளில் உற்பத்தி சரிந்ததாலும் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-16 நிதியாண்டில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் தேவை 11 சதவிகிதம் உயர்ந்திருந்தது. 2016-17 நிதியாண்டில் அது 5 சதவிகிதமாக இருந்தது. தேவை அதிகரிக்கும்போது அதை ஈடுசெய்ய வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.

2015-16 நிதியாண்டில் தேவை அதிகமாக இருந்து உள்நாட்டு உற்பத்தியும் குறைவாக இருந்ததால் கச்சா எண்ணெய் 5.2 சதவிகிதம் கூடுதலான அளவில் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் திரவ இயற்கை எரிவாயு பயன்பாடு 15 சதவிகிதம் கூடுதலாகவும், காஸ் பயன்பாடு 6 சதவிகிதம் கூடுதலான அளவிலும் இருந்தன. இயற்கை எரிவாயு உற்பத்தி 1 சதவிகிதம் சரிந்து 3.08 கோடி மெட்ரிக் டன்னாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியா 22 சதவிகிதம் கூடுதலான அளவில் பெட்ரோலியம் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது’என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

�,