ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பிலிருந்து நான்கு கலைப் பிரிவுகளை நீக்கியதற்காக அகாடமியை கண்டித்து ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ், ஆர்ட்ஸ் & சைன்சஸ் அமைப்பை சாடும் வகையில் பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்படும்போது, நேரலையிலிருந்து ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம் ஆகிய நான்கு பிரிவுகளுக்கான விருதுகள் நீக்கப்படும் என்று அகாடமி அறிவித்துள்ளது. நான்கு கலைப் பிரிவுகளையும் அவமதிக்கும் விதமாக அகாடமி எடுத்த முடிவை கடுமையாக சாடி ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர்கள் அகாடமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இக்கடிதத்தில். ஏற்கெனவே ஆஸ்கர் விருதுகளை பெற்ற க்வென்டின் டரான்டினோ, மார்டின் ஸ்கோர்செஸி, ஸ்பைக் லீ, டேமியன் சாசல் உள்ளிட்ட பல இயக்குநர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
அகாடமியின் புதிய விதிமுறைகளை ஏற்கெனவே கண்டிக்கும் விதமாக கில்லர்மோ டெல் டோரோ, அல்ஃபோன்ஸோ குரோன் ஆகிய இயக்குநர்கள் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்தக் கடிதத்தில் மொத்தம் 40 இயக்குநர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஒளிபரப்பிலிருந்து நான்கு பிரிவுகளையும் புறக்கணிப்பது கலைஞர்களை அவமதிக்கும் செயல் என்று இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதியன்று ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்படும். இயக்குநர்களின் கடிதத்திற்கு அகாடமியும் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய விதிமுறைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், நான்கு பிரிவுகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேரலையில் மட்டுமே ஒளிபரப்பப்படாது எனவும் பின்னர் இதர ஒளிபரப்புகளில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,