உடலுறவு குறித்த இந்தியர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டுகின்றன பல்வேறு வகையான ஆணுறைகள் மற்றும் உடலுறவுக்கு உகந்த கட்டில்களுக்கான அமோக வரவேற்பு. ஆனாலும், பாதுகாப்பான உறவு மற்றும் பாலியல் கல்வி குறித்த தவறான புரிதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது யூகௌ எனும் வணிக ஆய்வு மற்றும் தகவல் பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு. கடந்த செப்டம்பர் மாதம் 18 வயதுக்குட்பட்ட 1,030 இந்தியர்களிடம் இந்தக் கணிப்பு நடத்தப்பட்டது. இதுபற்றி குவார்ட்ஸ் இண்டியா இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
உடலுறவுக்குப் பின்னர் காலையில் பெண்கள் மாத்திரை சாப்பிடும் வழக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்வது பாதுகாப்பானதல்ல என்று இந்தக் கருத்துக்கணிப்பில் 15 சதவிகித இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு நிகழ்ந்த 72 மணி நேரங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படும் ஐபில் உட்பட 73 மருந்துகள் கர்ப்பம் உருவாவதைத் தடுக்கின்றன. ஆனால், இதைத் தொடர்ச்சியாகக் கருத்தடைச் சாதனமாகப் பயன்படுத்தினால், பெண்களின் உடலில் ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும்; அவர்களுக்குப் பால்வினை நோய்கள் வரும் அபாயமும் உண்டாகும்.
பழைமைவாதம் நிறைந்த இந்திய நாட்டில், திருமணத்துக்கு முன்னரே உடலுறவில் ஈடுபடும் பெண்களின் விருப்பமாக இந்த மாத்திரைகளே உள்ளன. மகப்பேறியல் நிபுணர்கள் வருத்தப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று. எந்த மருந்துக்கடையிலும், மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த மாத்திரைகளை வாங்க முடியும். இதனால், கருத்தடை மாத்திரைகளை அதிகமாக வாங்கும் நாடுகளில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.
இந்தக் கருத்துக்கணிப்பில் பங்குபெற்றவர்களில் 36 சதவிகிதம் பேர், இத்தகைய கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தியதாகச் சொன்னது அதிர்ச்சியளிக்கும் விஷயம்தான். இது குறித்து உறுதியாக எதையும் சொல்ல முடியாது என்று 49 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடலுறவின்போது விந்தைச் செலுத்தாமல் இருப்பது, உச்சகட்டம் அடையாமல் இருப்பது போன்றவை பாதுகாப்பான வழிமுறைகள் என்று 34 சதவிகிதம் பேர் இந்தக் கணிப்பில் கூறியுள்ளனர். மாதவிடாய்க் காலத்தில் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் ஏற்படாது என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். உச்சகட்டம் அடைவதற்கு முன்பாக நிறுத்திக்கொண்டால் கர்ப்பம் ஏற்படாது என்று 31 சதவிகிதம் பேரும், கருத்தடை மாத்திரைகள் பால்வினை நோய்கள் பரவுவதலில் இருந்து காக்கும் என்று 23 சதவிகிதம் பேரும், உறவுக்குப் பின்னர் சிறுநீர் கழிப்பது மற்றும் உடலுறுப்பைச் சுத்தம் செய்வதால் கர்ப்பம் தரிக்காது என்று 19 சதவிகிதம் பேரும் இந்த கணிப்பில் கூறியுள்ளனர்.
பழைமைவாதக் கருத்துகளால் நிறைந்த மனிதர்கள் பாலியல் கல்வியைப் பற்றிப் பேச்செடுத்தாலே சிடுசிடுத்து வரும் நிலையில், அதற்கான தேவையை உணர்த்தியுள்ளது இந்தக் கணிப்பு. ஆண் – பெண் உறவில் ஆர்வம்காட்டும் மக்களிடையே, பாலியல் கல்வி மற்றும் சுகாதாரமான உடலுறவு குறித்த கற்பித்தலைத் தொடங்க இந்திய அரசு முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
ஆனாலும், இந்தக் கணிப்பின் மூலமாகத் தற்போதைய இளைய தலைமுறையினர் ஆணுறையை அதிகம் பயன்படுத்திவரும் போக்கு தெரியவந்துள்ளது. சுமார் 60 சதவிகிதம் பேர் அதனைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். கருத்தடைச் சாதனங்களைப் பெண்களே பயன்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கும் எண்ணங்களுக்கு மத்தியில், இப்படியொரு மாற்றம் இளைய தலைமுறையிடம் தென்பட்டிருப்பது மிக முக்கியமானது.
இந்தக் கணிப்பின்படி ஆணுறைகளை 59% பேரும், கருத்தடை மாத்திரைகளை 21% பேரும், உடலுறவுக்குப் பிந்தைய மாத்திரைகளை 12% பேரும், பெண்களுக்கான கருத்தடைச் சாதனப் பயன்பாட்டை 5% பேரும், பிறப்புறுப்பில் பொருத்தப்படும் சாதனங்களை 4% பேரும், கருப்பையில் பயன்படுத்தும் சாதனங்களை 4% பேரும், நிரந்தரக் கருத்தடையை 4% பேரும் விரும்புவது தெரிய வந்துள்ளது. இது தவிர, பாதுகாப்பான உடலுறவுக்காக வேறு சில முறைகளைப் பயன்படுத்துவதும் இந்தக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டில் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பொறுப்புள்ளது என்றும், அதனால் பிறப்புக் கட்டுப்பாட்டுக்கான மாத்திரைகளை ஆண்களும் உட்கொள்வதற்கான தேவை இருப்பதாகவும், 84% ஆண்கள் நினைப்பது இந்த கணிப்பில் உறுதியாகியுள்ளது. இது வழக்கத்திற்கு மாறானது என்று தெரிவித்துள்ளது யூகௌ நிறுவனம்.�,