பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று (பிப்ரவரி 14) அதிகாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பாமக தரப்பு, அவர் சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்று திரும்பினார் என்று விளக்கம் கூறியுள்ளது.
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ், கடந்த சில நாட்களாக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவந்தார். தொடர்ச்சியான பயணங்களால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்றும், அதையடுத்து அவர் சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் அனுமதிக்கப்பட்டதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தத் தகவல் சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவியது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தரப்பு, அன்புமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக மேற்கொள்ளும் சாதாரண பரிசோதனைகளுக்காகவே அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்குச் சென்றார் என்றும், சிகிச்சை முடிந்ததும் உடனடியாக வீடு திரும்பினார் என்றும் தெரிவித்துள்ளது. “நேற்று இரவு வரை, வாட்ஸப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் தகவல்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், உணவுக்கோளாறினால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்தே, அவர் மருத்துவமனைக்குச் சென்று வந்தார்” என்று அன்புமணிக்கு நெருக்கமான பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
�,