�
போக்குவரத்து வாகனங்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பன். தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்களில் அதிகளவில் பயணிகள் ஏற்றிச் செல்வது தொடர்பாக, இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். பேருந்துகளில் 55 பயணிகளையும், மினி பேருந்தில் 25 பயணிகளையும், ஷேர் ஆட்டோவில் ஐந்து பயணிகளையும் மட்டும் ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்ற அனுமதிப்பது பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக இருப்பதாகத் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றுவதால் அரசுக்கு நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் சாலை வரி இழப்பு ஏற்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைப் பரிசீலித்து, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படவில்லை என்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இன்று (ஏப்ரல் 2) இந்த மனுவை விசாரித்தது நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு. இது சம்பந்தமாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 8ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.�,