bஅக்‌ஷய்: பஞ்சாப் காவல்துறையில் ஆஜர்!

Published On:

| By Balaji

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் அவமதிப்பு வழக்கில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பஞ்சாப் காவல் துறை சிறப்பு விசாரணைக் குழு முன்பு நேற்று (நவம்பர் 21) ஆஜரானார்.

மேலும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலும், தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கும் சந்தித்து கொள்ள தான் உதவி புரியவில்லை என்றும் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் புத்தகம் அவமதிக்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தின் பரித்காட் பகுதியின் பல இடங்களில் 2015ஆம் ஆண்டு சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்தது.

இந்நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சிங் நடித்த சர்ச்சைக்குரிய ‘மெசஞ்சர் ஆஃப் காட்- 2’ என்ற படத்தை பஞ்சாப்பில் வெளியிடுவதற்கு, பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலும், குர்மீத் ராம் ரஹீமும் சந்திக்க அக்‌ஷய் குமார் உதவி செய்ததாகவும், மும்பையில் உள்ள அக்ஷய் குமாரின் வீட்டில்தான் அந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், அந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி ரஞ்சித் சிங் குழு அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அக்‌ஷய் குமார் மறுத்து வந்தார்.

இந்த சந்திப்பு 2007ஆம் ஆண்டு நடந்ததாகவும், அக்‌ஷய் அதற்கு உதவி புரிந்ததாகவும் முன்னாள் எம்எல்ஏ ஹர்பன்ஸ் ஜலால், ரஞ்சித் சிங் குழு முன்பு தெரிவித்திருந்தார். அதையடுத்து, அக்‌ஷய் குமாருக்கு பஞ்சாப் காவல்துறை சிறப்பு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று சிறப்பு விசாரணை குழு முன்பு அக்‌ஷய் ஆஜரானார்.

குர்மீத் ராம் ரஹீமை, வாழ்க்கையில் ஒருமுறை கூட தான் சந்தித்ததில்லை என்று விசாரணைக் குழுவிடம் அக்‌ஷய் தெரிவித்தார். இதற்கு முன்னர் நவம்பர் 12ஆம் தேதி ஆஜரான போதும் அவர் இதையே தெரிவித்திருந்தார். அவரது சார்பாக ஆஜரான வழக்குரைஞர் சாந்த் பால் சிங் சித்து இது குறித்து கூறுகையில், “ரஞ்சித் சிங் குழு முன்பு முன்னாள் எம்எல்ஏ ஹர்பன்ஸ் ஜலால் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது. அக்‌ஷய் குமார் ராம் ரஹீமை சந்தித்ததே இல்லை என்கிற போது எவ்வாறு அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு உதவி புரிய முடியும்? விசாரணைக் குழுவின் அறிக்கையில் இது செவி வழி செய்தி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார். மேலும், அடுத்த சம்மன் அக்‌ஷய் குமாருக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share