அய்யா வைகுண்டர் அவதார தினம்: குமரியில் திரண்ட பக்தர்கள்!

Published On:

| By Balaji

ஆண்டு தோரும் மாசி மாதம் 20ஆம்தேதி அய்யா வைகுண்டர் அவதார தினம் இந்தியா முழுவதும் அவரது பக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இன்று குமரி மாவட்டத்தில் சாமிதோப்பில் கொண்டாடப்பட்ட அய்யா வைகுண்டர் 185வது அவதார தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அய்யா வைகுண்டர். 19ம் நூற்றாண்டில் அவதரித்தவராக கூறி அய்யாவழி பக்தர்களால் வணங்கப்படுகிறார். இவர் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களின் ஒரே உருவமாக பக்தர்களால் கருதப்படுகிறார். குமரி மாவட்டம் சுவாமிதோப்பில் தவம் செய்து, மக்களைக் காத்தவர்.

மற்ற அவதாரங்களில் ஆயுதங்கள் ஏந்தி அசுரர்களை அழித்து வதம் செய்த பரம்பொருள், இந்த அதிசய ஆண்டிக் கோல அய்யா அவதாரத்தில் அன்பால் ஆயுதமின்றி எதிரிகளை அழித்ததாக ஐதிகம். கேரள மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து சாதாரண மக்களைக் காத்து, சமத்துவ சமுதாயம் அமைய வழி செய்தவர் வைகுண்டர். இவர் அகிலத் திரட்டு,அருள் நூல் எனும் இரு அரிய பொக்கிஷங்களை அருளி இருக்கிறார்.

அவற்றில் இடம் பெற்றிருக்கிற கணிப்புகள் உண்மை வாக்காகவே பலித்து வருகின்றன. ‘ எத்தனையோ பலிக்கும் வாக்குகளை சொன்ன பகவான் வைகுண்டரின் திருவாக்குகளில் ஒன்று…‘கனத்த பூமி வெடிக்குதடா’ என்பதாகும். இது, நில அதிர்ச்சியை உணர்த்துகிறது. பெருமழை குறித்து வைகுண்டர் பாடிய தீர்க்கதரிசன வாசகங்களும் இப்போது 21-ம் நூற்றாண்டில் அப்படியே பலித்திருக்கின்றன.

‘காளி வெள்ளம் வருகிறது; கப்பல் செய்து வைத்திருங்கோ’ மற்றும்..மாரி வெள்ளம் அழிக்குதடா ,மாயாண்டி சொல்லுகிறேன்’ போன்ற வரிகள் அதற்கு துல்லியமான சான்றுகளாகின்றன என்கின்றனர் அய்யாவழி பெரியவர்கள். ‘மாரி’ என்கிற மழை வெள்ளத்தால் பேரழிவு நேர்ந்திருக்கிறது. காளி போல் வெள்ளம் ஆவேசமாக பெருக்கெடுத்து அழித்தது. சென்னை நகருக்கு கப்பலில் நிவாரணப் பொருட்களும் வந்தன.

வைகுண்டரின் பாடல் வரிகளில் இன்னும் எவ்வளவோ அற்புத ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. அவை பல எச்சரிக்கைகளை உலகுக்கு உணர்த்துகின்றன என்கின்றனர் பக்தர்கள்.

அய்யா வழி_வழிபாடு என்பது அன்பு வழி. இது அருவ-சைவ வழிபாட்டு முறை என்கின்றனர்.

இதன் தலைமை வழிபாட்டுத் தலம், வைகுண்டர் அமர்ந்து அருள்பாலித்த நாகர்கோவில் கன்னியாகுமரி அருகே சுவாமிதோப்பில் உள்ளது. அந்த காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் குமரி மாவட்டத்தின் ஊர்களும் இருந்தன. கேரள மன்னன் கொடுங்கோல் ஆட்சி செய்தாராம்.

நமது பெண்கள் தங்கள் தோளில் சேலை போடக்கூடாது, இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது, கழுத்தில் தங்கத்தாலி இருக்கக் கூடாது, ஆண்கள் மீசை வைத்தால் குற்றம், பனை ஏறினால் வரி செலுத்த வேண்டும், முட்டுக்கு கீழே வேட்டி - தலையில் தலைப்பாகை கட்டக்கூடாது, இருபாலரும் காலில் செருப்புப் போடக்கூடாது, உயர் சாதியினரின் தெருக்களில் நடக்கக்கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து மக்களை கொடுமைப்படுத்தினாராம் திருவாங்கூர் மன்னர்.

இதை வைகுண்ட பரம்பொருள் எதிர்த்தார். சாமானிய மக்களின் உரிமைகளைக் காத்தார். நோய் நொடியோடு வந்தவர்களுக்கு திருநாமத்தாலும், தண்ணீராலும் பிணிகள் போக்கினார். அவரது பெருமை பரவியது. மக்கள் சாமிதோப்பு வந்து அவரை வணங்கி, பலன் பெற்றுச் சென்றனர்.

இதைப் பொறுக்காத மலையாள மன்னன், அவரை கட்டி இழுத்து வரும்படி தனது படை வீரர்களை அனுப்பினான். வழியெங்கும் கொடுமைப்படுத்திய படியே அழைத்துப் போனார்கள். சுண்ணாம்புக் காளவாயில் போட்டார்கள். மிளகாய் வற்றல் புகையிலும், நெருப்பிலும் தள்ளினார்கள். இறைவன் மலர்ந்த முகத்தோடு வெளிப்பட்டார். கடைசியில் பசித்த புலி முன்னே அடைத்தார்கள். புலி… பாயவில்லை. பணிந்து நின்றதாம்.

அப்போதுதான் கேரள மன்னனுக்கு புத்தி வந்து தான் தண்டிக்க நினைத்தது மனிதனை அல்ல. மாலவனை என்பதை உணர்ந்தாராம். மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு வணங்கினான். ஆண்டிக் கோலம் கொண்ட அய்யா வைகுண்டர், சாமானிய மக்களின் வாழ்வு செழிக்க வேண்டி… சுவாமிதோப்பில் தவம் மேற்கொண்டார்.

அந்த மண்ணில்தான் அவர் அருளிய ‘அன்பு வழி’யின் தலைமைப் பதி இருக்கிறது. வைகுண்டரை வழிபட்டால்… தீராத நோய்கள் தீரும். துன்பங்கள் அகலும். இல்லத்தில் இனிமை மலரும். தாமரை மலருடன் கூடிய திருநாமமே அய்யா வழியின் சின்னமாக இருக்கிறது. அருவ வழிபாடு இதன் இன்னொரு சிறப்பு என்கின்றனர் அய்யாவழி பக்தர்கள்.

அய்யா வைகுண்டர் 185வது அவதார தினமான இன்று அதிகாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு பிரமாண்ட பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்க இரவில் இருந்தே நாகராஜா கோவில் திடலில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். தமிழகம் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

ஊர்வலத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கிச் சென்றார். ஊர்வலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் செல்ல, அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றனர்.

ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். அய்யா வைகுண்டரின் ஊர்வலத்துக்கு சாதி, மத பேதமின்றி வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முக்கிய சந்திப்புகளில் செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பானகரம், மோர் போன்ற நீராகாரங்களும், அன்ன தர்மங்களும் வழங்கப்பட்டன.

ஊர்வலம் சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்குத் தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை அடைந்தது. அங்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டது அய்யா வைகுண்ட சுவாமி மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தியது.

**சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share