அயோத்தி ராமர் கோயில்: டிரஸ்டுகளுக்கு இடையே மோதல்!

Published On:

| By Balaji

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

ராமர் கோயிலைக் கட்டுவதற்காக மத்திய அரசு அறக்கட்டளையை அமைத்து அந்த அறக்கட்டளையிடம் உரிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் புதிய ராமர் கோயிலை யார் கட்டுவது என்பது தொடர்பாக அயோத்தியிலும், இந்த வழக்கிலும் பங்கு வகித்த முக்கிய டிரஸ்டுகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

1990-களில் இருந்தே அயோத்தி ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக இயக்கம் நடத்திவந்த ராம ஜென்மபூமி நியாஸ் என்ற அறக்கட்டளைக்கும், வழக்கில் ஒரு மனு தாரரான நிர்மோஹி அகாரா டிரஸ்டுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ராமருக்கு சேவை செய்வதற்கும் ராமரின் அயோத்தி சொத்துக்களை நிர்வகிப்பதற்கும் உரிமைகளை வழங்குவதற்கான நிர்மோஹி அகாராவின் கூற்றை நிராகரித்தது. அதேநேரம், “நிர்மோஹி அகாராவின் வரலாற்று இருப்பு மற்றும் அவர்களின் பங்கு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, புதிய அறக்கட்டளையை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தை வகுக்கும் வேளையில், அதன் நிர்வாகத்தில் அகாராவிற்கு பொருத்தமான பங்கை ஒதுக்க வேண்டும்”என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளையின் தலைவரான மஹந்த் நிருத்யா ஊடகங்களிடம் பேசுகையில், “ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நியாஸ்தான் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான அறக்கட்டளை. இதில் நிர்மோஹி அகாரா போன்றவர்கள் சேர்ந்துகொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

ஆனால், நிர்மோஹி அகாராவின் நிர்வாகிகள் இதற்கு உடன்படவில்லை. நாங்கள் ராம ஜென்மபூமி நியாஸுக்கு எதிராக போராடி வருகிறோம். அப்படியிருக்க அவர்களின் டிரஸ்டில் நாங்கள் சேர வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அவர்கள் தங்கள் டிரஸ்டை எங்களுடன் இணைத்துக்கொள்ளலாம். அரசாங்கம் ஒரு தீர்வைக் கண்டுபிடித்து அனைவரையும் ஒன்றிணைப்பதே சரியான வழியாக இருக்கும்” என்கிறார்கள் நிர்மோஹி அகாரா டிரஸ்ட்டினர்.

இதற்கிடையில் அயோத்தியில் ஆதிக்கம் செலுத்தும் ’அகாரா’க்களில் ஒன்றான திகம்பர் அகாராவின் தலைவரான மஹந்த் சுரேஷ் தாஸ்,“உச்சநீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும். சோம் நாத் கோயில் அறக்கட்டளை போல ஒரு புதிய அறக்கட்டளையை உருவாக்க வேண்டும். ஏனென்றால் ஒர் கோயிலைக் கட்டுவது அரசாங்கத்தின் வேலை அல்ல. இது தொடர்பாக நான் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விரைவில் சந்திப்பேன்” என்கிறார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share