காலை நேரத்தில் வெயில், மாலை நேரத்தில் மழை… இடைப்பட்ட நேரத்தில் நிலவும் மிதமான தட்பவெப்ப நிலையில் கொறிக்க ஏதாவது இருந்தால் மனம் துள்ளும். அப்படிப்பட்ட நேரத்தில் சமைப்பதற்கு எளிதான இந்த அவல் வரட்டல் உதவும். உடனடி எனர்ஜி தரும். எளிதில் செரிமானமாகும்.
**எப்படிச் செய்வது?**
ஒரு கனமான வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் கறுப்பு எள்ளைச் சேர்த்து நன்கு வெடிக்கும் வரை வறுக்கவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளவும். அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் அதில் உடைத்த ஏழு முந்திரி பருப்புகளைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு ஒரு கப் தேங்காய்த் துருவல் சேர்த்து, கைவிடாமல் வறுக்கவும். இதனுடன் 100 கிராம் பொடித்த பாகு வெல்லம் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தேங்காயும் வெல்லமும் நன்கு சேர்ந்து திரண்டு, வாணலியில் ஒட்டாமல் வரும்போது இரண்டு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கலக்கவும். பின்னர் 200 கிராம் அவலைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அவல் நன்கு வெல்லத்தோடு கலந்ததும், வறுத்த கறுப்பு எள்ளைச் சேர்த்துக் கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
**சிறப்பு**
இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
�,