�
கோவையில் ஐடி பார்க் முன்பு பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் அந்தப் பகுதியே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
ஆட்டோ டிரைவர் அருண் பிரசாத் அப்பகுதிக்கு நேற்று(01.10.19) கோவில்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீரணத்தம் பகுதியில் தனது ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். அவருக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது ஆட்டோ நிறுத்தப்பட்டதும் அதற்கு அருகிலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வண்டியிலிருந்து இறங்கியிருக்கின்றனர்.
வண்டியை அருகிலேயே நிறுத்தியதால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால், இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் வண்டியில் வைத்திருந்த கட்டுமானத் தொழிலுக்குப் பயன்படுத்தும் இரும்புப் பொருட்களால் அருண் பிரசாத்தை தாக்கியிருக்கின்றனர்.
அருண்பிரசாத்தை சரமாரியாக தாக்கியதால் கை,மார்பு, வயிறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிய வடிய அவர் அங்கேயே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அருண் பிரசாத் இறந்துவிட்டார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.�,