தூத்துக்குடி ஆணையம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன்!

Published On:

| By Balaji

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்ரவரி 25) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில்…ரஜினி விலக்கு கேட்டார். ஆனால், இன்று மட்டுமே ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று ஆணையம் தெரிவித்துள்ளதோடு ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரியும், எழுத்துபூர்வமாக கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கத் தயார் என்றும் ரஜினிகாந்த் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் பின்னணி பற்றி, [ஆணைய ஆணை: ரஜினி பதுங்கும் பின்னணி]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/02/24/13/rajini-avoid-tuticorin-police-firing-enquiry-commission-why) என்ற தலைப்பில் மின்னம்பலம். காமில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 25) ஆணையம் ரஜினியை அழைத்திருந்த தேதி என்பதால், ரஜினி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளம்பாரதி உள்ளிட்ட சில வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகினர். ரஜினி நேரில் வர முடியாதது பற்றி அவர்கள் ஆணையத்திடம் விளக்கினர். பின் வெளியே வந்து, “ரஜினியின் கோரிக்கையை ஆணையம் ஏற்றுக் கொண்டது” என்று பத்திரிகையாளர்களிடம் கூற, ‘ரஜினிக்கு அடிபணிந்த ஆணையம்’ என்றெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவத் தொடங்கின.

கொஞ்ச நேரத்தில் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் அவசர அவசரமாக செய்தியாளர்களை தூத்துக்குடி அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் ரஜினி தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதாக வெளிவந்த தகவல்களை மறுத்தார்.

“இந்த விசாரணையில் ரஜினிகாந்தின் சாட்சியத்தை விசாரணை ஆணையம் மிக முக்கியமாக கருதுகிறது. ஆனாலும் அவர் தான் நேரில் ஆஜரானால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், தனக்கு இந்த தேதியில் சினிமா தொடர்பாக கமிட்மென்ட் ஏற்கனவே இருக்கிறது என்றும் கூறி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டார். எனவே இன்றுமட்டுமே ரஜினிக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு மீண்டும் இது தொடர்பாக சம்மன் அனுப்பப்படும். ரஜினி மற்றொரு நாள் ஆஜராக வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்தத் தகவல் ரஜினிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share