அமெரிக்க ராணுவத்தளம் மீது தாக்குதல்: மூவர் பலி!

Published On:

| By Balaji

�ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தின் மீது மார்ச் 11ஆம் தேதி இரவு மீண்டும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க படை வீரர் ஒருவர், அமெரிக்க காண்ட்ராக்டர் ஒருவர், பிரிட்டிஷ் வீரர் ஒருவர் என மொத்தம் மூன்று பேர் கொல்லப்பட்டனர். .

கடந்த 2020 ஜனவரி 3ஆம் தேதி ஈரான் நாட்டின் ராணுவத் தளபதியான சுலைமானியை அமெரிக்கப் படைகள் ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றன. இதையடுத்து இதற்கு பதில் தாக்குதலாக ஈரானியத் தரப்பிலிருந்து, ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், ஈரான் அரசுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில்தான் மார்ச் 11ஆம் தேதி ஈராக் நேரப்படி இரவு 7.35 மணிக்கு பாக்தாத் அருகில் இருக்கும் தாஜி ராணுவத்தளம் மீது 15-க்கும் மேற்பட்ட சிறிய வகை ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதை அமெரிக்கக் கூட்டுப்படைகளின் அதிகாரபூர்வச் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார்.

இந்த ராணுவத்தளத்தில்தான் அமெரிக்க வீரர்கள், ஈராக்கிய வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share