புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

Published On:

| By Balaji

புதுச்சேரி போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது கழகத்தின்மூலம் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளை, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆதலால், நமது பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய நிறுத்தினால், பேருந்துகளை நிறுத்தி பரிசோதனைக்கு வேண்டிய பயணச்சீட்டு இயந்திரம், வழிதட பட்டியல், பயணிகள் விவர பட்டியல் போன்ற பரிசோதனைக்கு உரிய ஆவணங்களை எந்தவித தடைகளும் கூறாமல் அவர்களிடம் சமர்ப்பித்து பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், பரிசோதனையின்போது அவர்களிடம் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி போக்குவரத்துக் கழகத்தின் தொலைதூரப் பேருந்துகளில் பயணிப்போர் குறித்து சோதனை செய்ய, டிக்கெட் பரிசோதகர்கள் கிடையாது. இதனால் பேருந்தில் பயணிகள் அதிகளவில் பயணித்தாலும், வருவாய் இல்லை எனக் கூறி முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share