தென்காசி மாவட்டத்தின் தேவைகள்: தீர்த்து வைப்பாரா முதல்வர்?

Published On:

| By Balaji

டி.எஸ்.எஸ். மணி

புதிய மாவட்டங்களாக ஐந்து மாவட்டங்களை அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நவம்பர் 22 ஆம் நாள் தென்காசிக்கே சென்று, தென்காசி புதிய மாவட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான முன் ஏற்பாடாக அத்தகைய நேரில் துவக்கி வைப்பது உதவும் என்று அரசியல்வாதிகள் நினைத்தாலும், ‘நான் ஒரு விவசாயி’ என்று அவ்வப்போது உரைக்கும் முதல்வர், முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பி நிற்கும் ஒரு மாவட்டமான தென்காசி மாவட்டத்தை துவக்கி வைக்கும்போது, அங்குள்ள மக்களின் நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா? என்று பொதுமக்களும், கேட்கத் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடியையும், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் உள்ளடக்கிய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் 1801ல் உதயமானது. அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் 46 வயது கட்டபொம்மு தூக்கிலிடப்பட்டான். ஆற்காடு நவாப் கட்டுப்பாட்டில் இருந்த நெல்லை மாவட்டம் பிரிட்டிஷாரின் முழு ஆளுமைக்கு அப்போது வந்தது.. தமிழ்நாட்டில் நெல்லைச் சீமையிலே தான் வந்தே மாதரம் முழக்கம் வலிமையோடு இருப்பதாக காவல்துறை குறிப்பு அனுப்பும் வகையில் சென்றது.

சுப்பிரமணிய பாரதி, வஉசி, சிவா, வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி என இங்கிருந்துதான் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் நம் நாட்டுக்குக் கிடைத்தார்கள். ம.பொ. சிவஞானக்கிராமணியார் தனது, ’விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு’ என்ற இரண்டு பாகங்களைக் கொண்ட நூலில், நெல்லையை முக்கியமாக குறிப்பிடுகிறார். உச்சரிக்கத் தெரியாத வெள்ளைக்காரன், திருநெல்வேலியை, ’தின்னவேலி’ என ரயில் நிலையம், தபால்-தந்தி அலுவலகம் ஆகியவற்றிலும், ஆவணங்களிலும் எழுதி மாவட்டத்தின் பெயரையே மாற்றி விடுகிறான்.

நெல்லை நகராட்சி தொடங்கும்போதே, எதிர்ப்பு இல்லாமல் நகராட்சி உறுப்பினராக ஸ்ரீபுரம் வட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் கே.வி.நாராயணன், ’நெல் வயல்களால் சூழப்பட்ட ஊர் என்பதால், திருநெல்வேலி என்ற பெயர் சூட்டப்பட்டது’ என்பதை நகராட்சி தீர்மானமாக கொண்டு வந்தார். அவர்தான், சுதந்திர தினப் பிரகடனத்தை அறிவிக்கும் 1947 ஆகஸ்ட் 15 ம் நாள் நெல்லை சந்திப்பு, ம.தி.தா.இந்துக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர். அவரது சொந்த ஊரும் இன்றைய தென்காசி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமம். தென்காசி பகுதியில் தாமிரபரணி பாய்ந்தோடுகிறது. சிற்றாறு என அது அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற குற்றாலம் பகுதி, அருவிகளால் நிரம்பியுள்ளபோது, ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான சுற்றுலாவாசிகள் வந்து போனாலும், அரசுக்கு வந்து சேர வேண்டிய அதிகப்படியான வருவாய் வருவதில்லையே ஏன் என்றும் முதல்வர் எண்ணிப்பார்க்க வேண்டும். தண்ணீர் வழிந்தோடும் நீரோடைகள் நிறைய இருந்த, அல்லது இருக்கும் இடம் குற்றாலம். அவற்றில், தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகமான அளவில் செய்யப்பட்டுள்ளன என்ற உண்மை முதல்வர் காதுகளுக்கு சென்றதா? என்றும் பொதுமக்கள் கேட்கிறார்கள். நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்யக் கூடியவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக வந்து விட க் கூடாது என்ற ஆலோசனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? என்றும் கேட்கிறார்கள். ஆண்டுக்கு மூன்று போகம் விளைந்த தென்காசி மாவட்ட வயல்கள் இன்று ஒரு போகம் மட்டுமே விளையக் காரணம் என்ன என்பதையும் தமிழக அரசு ஆய்வு செய்யவேண்டும். சில தனி நபர்களின் லாப வேட்டைக்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவே அத்தகைய விளை நிலங்களின் பாழ் நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய சூழலில், நேரடியாக மாவட்ட துவக்க விழாவிற்கு தென்காசி வருகின்ற முதல்வர் முன்னால், சில கோரிக்கைகளை வைக்க மக்கள் விரும்புகிறார்கள்.

1) மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரக்கூடிய நீர்வழி ஓடைகள் அனைத்திலும், கடைமடை வரைக் கால்வாய்கள் அமைக்க வேண்டும்

2) கடையநல்லூர் வட்டாட்சியில், கருப்பாநதி அணையிலிருந்து, சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள, வீரசிகாமணி வரை சிமெண்ட் கால்வாய்கள் அமைக்க வேண்டும்

3) சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் செண்பகவல்லி தடுப்பணையை உடனே கட்ட வேண்டும்

4) செண்பகவல்லி கால்வாயில் இருந்து சங்கரன்கோவில் கடைமடை வரை சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும் அது விருதுநகர் வரை விவசாயத்திற்கான தண்ணீரை கொடுக்கும்.

5) சங்கரன்கோவிலில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தையும், கொள்முதல் சந்தையும், அமைக்கப்பட வேண்டும்

6) குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் தடுப்பணை கட்டப்பட வேண்டும். அதற்கான பயன்படுத்தப்படாத பூமி தனியாரிடமிருந்து எடுக்கப்பட ஆவண செய்யவேண்டும்.

7) குற்றாலம் மெயின் அருவியில் வரக்கூடிய ஆற்றின் இருகரைகளிலும் கழிவு நீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கலப்பதைத் தடுத்து கடைமடை வரை சுவர்கள் கட்டி படித்துறைகள் அமைக்கப்பட வேண்டும்

8)தென்காசியில் இருக்கும் காய்கறி சந்தையை விரிவுபடுத்த வேண்டும்

9) மலர்கள் அதிகம் விளைவிக்கப்படும் பகுதியான, வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் புளியங்குடியை இணைக்கும் சாலையில் வாசனைத் திரவிய ஆலை அமைக்க வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்காசியில் இருந்து இதற்கான வாக்குறுதிகளை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தென்காசி புதிய மாவட்ட மக்கள் காத்திருக்கிறார்கள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share