மண்டபம் டு பல்லவன் இல்லம்: அசுதோஷ் சுக்லா மாற்றப்பட்ட பின்னணி!

Published On:

| By Balaji

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களின் போது தமிழக தேர்தல் டிஜிபியாக இருந்த அசுதோஷ் சுக்லா, தேர்தல் முடிந்த பிறகு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபியாக மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் நவம்பர் 21 ஆம் தேதி அவர் சென்னை போக்குவரத்து விஜிலென்ஸ் டிஜிபியாக மாற்றப்பட்டு மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்.

பொதுவாக அரசு நிர்வாகத்துக்கு வேண்டப்படாத அதிகாரிகள் மண்டபம் முகாமுக்குதான் மாற்றப்படுவார்கள் என்பது நிர்வாக வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் அசுதோஷ் சுக்லாவின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு பல வகைகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

‘தேர்தல் டிஜிபியாக இருக்கும்போது ஆய்வுக் கூட்டங்கள் நடக்கும்போது சுக்லாவுக்கு போன் அழைப்பு வரும். அதை எடுத்துப் பேசிவிட்டு, ‘திமுக தலைவர் ஸ்டாலின் தான் பேசுறார். சில புகார்களைச் சொல்கிறார். உடனே நடவடிக்கை எடுங்க’ என்று அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார் சுக்லா. மேலும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது திருப்பூரில் வீட்டுக்கு வீடு பணம் கொடுத்துவிட்டு அதற்கு அடையாளமாக அதிமுகவினர் ஸ்டிக்கரை ஒட்டிவைத்து விட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்று மின்னம்பலத்தில் [ஸ்டிக்கர் வீடுகள்: இடைத்தேர்தலில் அதிமுகவின் அசத்தல் கரன்சி வியூகம்](https://minnambalam.com/k/2019/05/01/91)என்ற தலைப்பில் வெளியிட்டோம். இதுபற்றி டிஜிபி சுக்லா கவனத்துக்குக்கொண்டு செல்லப்பட்டு உடனடியாக ஆய்வு நடத்தி ஸ்டிக்கர்களை பிய்த்து எறிய உத்தரவிட்டார்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சுக்லா மீது அதிருப்தியில் இருந்த அதிமுக அரசு தேர்தல் முடிந்ததும் அவரை மண்டபம் முகாமுக்கு மாற்றியது.

இந்த நிலையில்தான் டிஜிபி அசுதோஷ் சுக்லாவை, சென்னை போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் டிஜிபியாக மாற்றி உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

சுக்லா மீதான ஆளுங்கட்சியின் அதிருப்தி குறைந்துவிட்டதா என்று ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “ அதிருப்தியெல்லாம் குறையவில்லை. சுக்லாவும், நிரஞ்சன் மார்ட்டியும் நல்ல நண்பர்கள். மார்ட்டி விரைவில் ஓய்வுபெறப்போகிறார். அவர்தான் சுக்லாவுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், ‘சுக்லா வளமான பதவியெல்லாம் எதிர்பார்க்கவில்லை. மண்டபத்தில் இருந்து, விடுவித்தால் போதும் என்கிறார்’ என்று பேசி சென்னை மாநகரப் போக்குவரத்து விஜிலென்ஸ் டிஜிபி என புதிய பதவியை உருவாக்கி சென்னைக்குக் கொண்டுவந்துவிட்டார். மண்டபத்தில் வாடுவதை விட சென்னை பல்லவன் இல்லத்தில் ஒரே ஒரு அறையில் உட்கார்ந்திருப்பது பெட்டர்தானே?” என்கிறார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share