தமிழ்நாடு: இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை?- பாஜக திட்டம்!

Published On:

| By Balaji

அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்தை மையமாக வைத்து உச்ச நீதிமன்ற உத்தரவை ஒட்டி கணக்கிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமையும் அதிர்வுகளைக் கிளப்பியது. அஸ்ஸாம் மாநிலத்திலேயே 19 லட்சம் பேர் இந்த பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தனர். அவர்களை மீண்டும் இந்திய குடிமகன்களாக கணக்கில் கொள்ள மத்திய அரசு சில ஆவணங்களைக் கோரியிருக்கிறது.

இந்நிலையில் அஸ்ஸாமில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிக்க வேண்டும் என்று அண்மையில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா தெரிவித்திருந்தார். “யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் செட்டிலாகிவிடலாம் என்று உலகில் எந்த நாடுமே இல்லை. எனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்க வேண்டியது அஸ்ஸாமில் மட்டுமல்ல நாடு முழுமைக்குமே இப்போதைய காலத்தின் கட்டாயம்” என்று கூறியிருந்தார் அமித்ஷா. இதே கருத்தை பாஜகவின் பல்வேறு தலைவர்களும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டால் பல்வேறு ஆண்டுகலாக தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலைமை என்னாகும் என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்களிடைய எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 110 இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் சுமார் 66 ஆயிரம் அகதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களைத் தவிர அரசாங்கத்தில் பதிவு செய்துகொண்டு சுமார் 35 ஆயிரம் பேர் வெளியே வசிக்கிறார்கள். இவர்களில் பலர் பொருளாதாரத்தில் நன்கு செட்டிலானவர்கள். ஆனால் பொருளாதார வளம் குறைந்தவர்கள்தான் அன்றாட வேலைகளுக்குச் சென்று அகதி முகாம்களில் வசித்து வருகிறார்கள். அகதிகளுக்கு தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்த குழந்தைகளில் பலர் பதிவு செய்யப்படாமலும் சிலர் பதிவு செய்யப்பட்டும் இருக்கிறார்கள். தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டுமல்லாமல் திபெத் அகதிகளும் கூட மீச்சிறு அளவில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிக்கும் பட்சத்தில, இந்த அகதிகளின் நிலை என்ன என்பதுதான் இப்போது பாஜக மேலிடத்தில் விவாதத்துக்குரிய சங்கதியாக இருக்கிறது.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தராஜன் இருந்தபோது இலங்கைத் தமிழ் புள்ளிகள் சிலர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் உதவியோடு கமலாலயத்தில் சந்தித்து சில முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் முதன்மையானது போர் காரணமாக இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வாழ்பவர்களுக்கு இந்தியக்குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பது. அந்தக் கோரிக்கையை அப்போதே தமிழிசை மத்திய பாஜக தலைமைக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் இலங்கை அரசு தமிழகத்தில் இருக்கும் அகதிகள் திரும்ப வரவேண்டும் என்று அறிவிக்கையும் வெளியிட்டது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் அகதிகள் அங்கே போனால் தங்கள் நிலைமை என்னாகுமோ என்று கருதி போக மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்சத்தில், தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்கலாமா என்ற முக்கிய ஆலோசனை பாஜக மேலிடத்துக்கு இங்கேயிருந்து முன் வைக்கப்பட்டிருக்கிறது.

“பொதுவாகவே என்.ஆர்.சி. பதிவேடு தயார் செய்யப்படும்போது அதில் பாதிக்கப்படுபவர்கள் இந்துவாகவோ, பார்சியாகவோ, கிறிஸ்துவராகவோ, சீக்கியராகவோ இருந்தால் தளர்வு காட்டலாம் என்று கொள்கையை பாஜக அரசு வைத்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கும் அகதிகள் முகாம்களில் பெரும்பாலானோர் இந்துக்கள், கிறிஸ்துவர்கள்தான். எனவே இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் தமிழர்கள் மத்தியில் நற்பெயர் எடுக்க பாஜக திட்டமிடுகிறது.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் அகதிகள் நலனைப் பற்றி பல வருடங்களாக பேசிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை கூட்டணியிலிருந்தபோது மத்திய அரசிடம் அகதிகள் நலன் பற்றி எதுவுமே பேசவில்லை. இந்நிலையில் இப்போது பாஜக அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை என்ற முடிவெடுத்தால் அது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவாக இருக்கும் என்று மேலிடத்துக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வழக்கம்போல சில சகுனிகள் இதில் தலையிட்டு பாஜக மேலிடத்தை திசை திருப்பாமல் இருக்க வேண்டும்” என்கிறார்கள் தமிழக பாஜகவின் கொள்கை முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் சில சீனியர்கள்.

**-ஆரா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share