Sகிச்சன் கீர்த்தனா: அசோகா அல்வா!

Published On:

| By Balaji

கீழக்கரையில் மட்டும் கிடைக்கும் ‘தொதல்’ என்றழைக்கப்படும் கறுப்பு அல்வா, திருமணங்களில் பரிமாறப்படும் வெள்ளைப் பூசணிகொண்டு செய்யப்படும் காசி அல்வா, தூத்துக்குடி மாவட்டம் முதலூரில் தயாரிக்கப்படும் மஸ்கோத் அல்வா, திருவாரூர் புகழ் பருத்திப்பால் அல்வா, கோழிக்கோடு புகழ் ரப்பர் அல்வா என்று தென்னிந்தியாவின் டாப் அல்வாக்கள் பட்டியல் நீளமானது. அசோகா அல்வா பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் திருவையாறு மிகவும் புகழ்பெற்றது. மற்ற அல்வா வகைகளை காட்டிலும் இது மிகவும் சுலபமாக செய்யலாம். அதேநேரத்தில் சுவையும் அபாரமாக இருக்கும்.

**என்ன தேவை?**

பாசிப்பருப்பு – ஒரு கப்

கோதுமை மாவு – 2 டீஸ்பூன்

சர்க்கரை – ஒன்றரை கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

நெய் – ஒரு கப்

முந்திரி – 10

ஃபுட் கலர் – சிறிதளவு

அலங்கரிக்க…

வெள்ளரி விதை – 4 டீஸ்பூன்

பிஸ்தா துருவல் – 2 டீஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும். பிறகு, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேகவிடவும். அடிகனமான பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வறுத்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். வெந்த பாசிப்பருப்புடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்த பிறகு ஃபுட் கலர், நெய், கோதுமை மாவு சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு சுருண்டு வரும்போது முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வெள்ளரி விதை, பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: கோதுமை அல்வா](https://minnambalam.com/public/2021/12/10/1/wheat-halva)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share