வெங்காயத்துக்குத் தடை: கண்ணீர் விடும் ஆசிய நாடுகள்!

Published On:

| By Balaji

வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், ஆசிய நாடுகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

ஆசிய உணவுப் பொருட்களின் மிகப்பெரிய விற்பனையாளராக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் சாம்பார் மட்டுமின்றி, வங்கதேச பிரியாணி, பாகிஸ்தான் கோழிக்கறி ஆகியவற்றிற்கு இந்திய வெங்காயம் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்தது. இதனால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்தது. 100கிலோ வெங்காயம் குறைந்தபட்சம் ரூ.4500க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.70 வரை ஒரு கிலோ வெங்காயத்தின் விலை உயர்ந்தது. இதனை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. தமிழகத்தில் ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு தனது கையிருப்பில் இருந்த வெங்காயத்தை மாநில அரசுகளுக்கு வழங்கியது. நாட்டில் வெங்காய தட்டுப்பாட்டை குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகக் கடந்த வாரம் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு.

இதன் எதிரொலியாக ஆசியச் சந்தைகளில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெங்காய விலை இரட்டிப்பாகியுள்ளது. வங்க தேசத்தில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மானிய விலை வெங்காயக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். வெங்காய விலையைக் குறைக்க மியான்மர், எகிப்து, துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. வங்கதேசத்தின் வர்த்தக கழக செய்தி தொடர்பாளர், ஹூமாயுன் கபிர் கூறுகையில், விரைவாக வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான அனைத்து வழிவகைகளையும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையை பொறுத்தவரை வெங்காயத்தின் விலை 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, இந்திய மதிப்பில் 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது.

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் இந்தியா 2.2 மில்லியன் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிய நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share