விசவாயு தாக்கி 12 பேர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மூட ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஆர்.ஆர் வெங்கடாபுரத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற தொழிற்சாலை உள்ளது. மே 7ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு இந்த தொழிற்சாலையில் உள்ள நிலுவை கொள்கலனிலிருந்து பாலீஸ்டைரின் தயாரிக்கப் பயன்படுத்தும் ஸ்டைரீன் என்ற வாயு காற்றில் கலந்து 5 கிமீ தூரத்துக்குப் பரவியது. இதனால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மனிதர்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகளும் இந்த விசவாயு தாக்கி வாயில் நுரை தள்ளி உயிரிழந்தன.
இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விசவாயு பரவல் குறித்தும், எல்ஜி பாலிமர் நிறுவனத்துக்கு எதிராகவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “நிறுவனம் முழுவதுமாக பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும், நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிறுவனத்தை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், உள்ளிருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உட்பட எதுவும் மாற்றப்படக்கூடாது. விசாரணைக் குழுக்கள் நிறுவன வளாகத்துக்குள் ஆய்வு செய்ய விரும்பினால், அதுகுறித்த விவரங்கள் நிறுவனத்தின் நுழைவாயிலில் இருக்கும் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்த நிலையில் எழுத்துப்பூர்வமான உத்தரவுகள் நேற்று (மே 24) வெளியிடப்பட்டுள்ளன.
**-கவிபிரியா**�,