அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் பட்டியலின வகுப்பினருக்கு 18 சதவிகிதம் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் அருந்ததியருக்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் தமிழக அரசால் 2009ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதற்கான ஆணையம் அமைக்கப்பட்டது முதலே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார்.
இறுதியாக, “ அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டால், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சாதியினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுகின்றனர். அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 2009 சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுபோலவே உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த யசோதா உள்பட பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதுதொடர்பான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று (ஆகஸ்ட் 27) தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள், “தாழ்த்தப்பட்ட பிரிவினரிடையே உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம். அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும் உள்ஒதுக்கீடு முறை செல்லாது என கடந்த 2004ஆம் ஆண்டு 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்ததால் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், “பட்டியல் வகுப்புகளின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரும் சட்டங்களை இயற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுக்கக் கூடாது” என்றும் கருத்தை முன்வைத்தனர்.
உள் ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்திருப்பது தமிழகத்தில் தற்போது அருந்ததியருக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க தடை எதுவும் கிடையாது அந்த முறை தொடர்ந்து நீடிக்கலாம் என்பதை உறுதிசெய்துள்ளது. அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அணிருதா போஸ் ஆகியோர் அடங்கிய ஐவர் அமர்வுதான் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இனி 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில், புதிதாக விசாரிக்கப்பட்டு புதிய தீர்ப்பு வெளியாகும். அதுவரை உள் ஒதுக்கீடு தடையின்றி தொடரும்.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “சமூகநீதி இலட்சியத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்ட 18 சதவிகிதத்தில், அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும், வரவேற்கத்தக்கது ஆகும்.அன்றைய தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும்; அருந்ததியினர் இன மக்களுக்கு வரப்பிரசாதமாகும்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
**எழில்**�,