ஸ்ஸிங் ஸூயி 2 – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம்” இந்த கோஷத்துக்கு சொந்தக்காரர்கள் பாஜக. சரி, அது, அவர்களுடைய விருப்பம்.

அந்த விருப்பத்தை இந்த ஜனநாயக நாட்டில் மக்களோடு இணைந்து தான் அவர்கள் ஈடேற்றிக் கொண்டாக வேண்டும். அதற்கு மக்களின் மனதை முதலில் வென்றெடுக்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டுக் கொண்டிருப் பவர்களை நோக்கி நத்தை கூட நகராது.

ஒன்றிணைந்த இந்திய மக்களுக்கான ஆட்சியா இங்கே நடக்கிறது ? காவிரியில் தண்ணீர் தர காலமெல்லாம் மறுத்து வந்தது கர்நாடகம். திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்தினால் காவிரி நீரில் தமிழகத்துக்கு பாத்தியதைப்பட்ட 419 டி.எம்.சி தண்ணீரை தரச் சொல்லி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தது.

ஆனாலும், தமிழகத்துக்கு துரோகம் செய்யும் வகையில் மத்திய அரசு அதனை அரசிதழில் வெளியிட தாமதித்துக் கொண்டேயிருக்க, மேலும், மேலும் போராடி ஒருவழியாக அரசிதழில் வரவைத்த பிறகும் இன்னமும் இங்கே தண்ணீர் வந்த பாடில்லை. வரலாறு காணாத வறட்சியில் தமிழகம் இங்கே பொசுங்கியது. அகும் இங்குமான அரசியல் பித்தலாட்டங்களில் தமிழகத்தின் டெல்ட்டா கருகியது.

மத்திய அரசாங்கத்திடம் வறட்சி நிதியாக தமிழகம் 39,565 கோடிகள் கேட்க, கேலி செய்வது போல வெறும் 1748 கோடி மட்டுமே ஒதுக்கியது. இந்த அணுகுமுறை வறட்சியை விடக் கொடுமையானது.

ஆனால், இலங்கையில் வறட்சி என்று தெரிந்தவுடன் ஓடோடிச் சென்று, உடனடி உதவியாக 8 தண்ணீர் டாங்கர்களும் – 100 மெட்ரிக் டன் அரிசியும் வாரிக்கொடுத்து அனுப்புகிறது மத்திய அரசு. பயிர்கள் கருகிக் கிடக்கும் தமிழகத்தைக் கடந்து தான் அது இலங்கைக்குப் போனது. இதற்குப் பெயர்தான் கறுப்பு நகைச்சுவை. ஒரு மாநில மக்களை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது.

மக்களுக்கு எந்த ஒரு விளக்கமும் சொல்லாமல் மீத்தேன் எடுக்கிறோம் – ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்று நோண்டிப் போட வேண்டியது. போராடுபவர்களிடம் தவறான வாக்குறுதிகளைத் தந்துவிட்டு அங்கே சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டியது.

திட்டங்களை கொண்டு வருவது தவறில்லை. ஆனால், அதன் மேல் மக்களுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டுவிடும் போது, நின்று, நிதானித்து, அவர்களுக்கு விளக்கி, அரவணைத்து முன்னேறுவது தான் ஒரு நல்லரசாங்கத்துக்கு அழகு.

இதைப் பற்றி யாரும் கேட்டால், அவர்களை கேலிச் சிரிப்போடு உதாசீனப்படுத்தி மகிழ்வது எந்த விதத்தில் நியாயம். இப்படிப்பட்ட அணுகுமுறைகளை எல்லாம் படித்த இளைஞர்கள் வயிற்றெரிச்சலோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பொதுவாகவே பாஜக சார்பில் பேசுபவர்களிடம் ஒரு “தலைமையாசிரியத்தனம்” தொனிப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள். “எல்லாம் எங்களுக்குத் தெரியும், சொல்வதை மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள்” என்று புறக்கணிப்பதாக மனதுக்குள் புழுங்குகிறார்கள். இது நல்லதல்ல. இது பீகாரல்ல. கல்வி – கேள்விகளில் சிறந்த தமிழகம். இங்கே , யார் எதைக் கேட்டாலும், “உஷ்” என்பது ஏற்புடையதல்ல.

தமிழகத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், எந்தவிதமான தமிழகக் கோரிக்கைகளையும் காதில் வாங்காமல், தமிழக மக்களை மேலும் மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதன் மூலம், இங்கே இருக்கும் ஆட்சிக்கு எதிரான ஓர் வெறுப்பை மக்களிடையே ஏற்படுத்துவது தான் மத்தியில் ஆள்வோரின் நோக்கம் என்று வெளிப்படையாகவே தோன்றுமளவுக்கு தமிழக பாஜகவினரின் நடவடிக்கைகள் இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்துவது போல அவர்களது பேட்டிகளும் இருக்கிறது. இந்த அணுகுமுறை நல்லரசியலுக்கு ஏற்றதல்ல.

தமிழகத்தின் இன்றைய நிலைமை சொல்லிக் கொள்ளும் படியானதாக இல்லை. இளைஞர்களிடையே சலிப்பும், நம்பிக்கையின்மையும், விரக்தியும் மெல்ல, மெல்லப் பரவிக் கொண்டே வருகிறது. மாநிலப் பீடத்தில் சந்தர்ப்பவசத்தால் ஏறி அமர்ந்து கொண்டு மனம் போன போக்கில் ஆள்வோர்களின் சுயநல ஆட்டங்கள் மக்களின் மனதைக் குடைகிறது.

அமைச்சர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்கள் அபத்தமானப் பேச்சுகளினால் அந்தரத்தில் பம்பரம் விட்டு விளையாடிக் கொண்டிருப்பதைக் காணும் போது எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மக்களின் மனதில் கவிந்து மிரட்டுகிறது. ஓரவஞ்சனையோடு இருப்பவர்களிடம் சென்று முறையிட்டுப் பயனிலை. பாவப்பட்ட மக்களுக்கு போக்கிட மில்லை.

இந்த நேரத்தில்தான், தீர்க்கதரிசி பாபா வான்கா முன்பு சொன்னது போல, செஞ்சீனம் தன் ட்ராகனை இங்கே அவிழ்த்து விட்டு விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படி ஒரு சூழலில் தமிழகம் சிக்கியிருப்பதற்குக் காரணம் பாஜக வினரின் அவசரம், ஆர்ப்பாட்டம், தப்பாட்டம். இதை சொல்வதில் எனக்கு தயக்கம் ஏதுமில்லை. எந்தவொரு கட்சியையும் சாராதவன் நான். சமூக அக்கறை கொண்டதோர் எழுத்தாளன் என்பதே என் எல்லை. நாட்டு நலனே எனக்குப் ப்ரதானம். அதை யார் முன்னெடுத்தாலும் சந்தோஷம்.

தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட மாநிலக் கட்சிகளின் மேல் மக்களுக்கு அதிருப்தி இருப்பது உண்மைதான். அந்த அதிருப்தியை அதிகமாக்கி விடுவதன் மூலமே தங்களுக்கான வாய்ப்பு பிரகாசமாகிவிடும் என்று பாஜக எண்ணுமானால் அது அரசியல் அபத்தம். இன்னொருவர் மீதான அதிருப்தி, நமக்கான நற்சான்றிதழாகி விடாது.

மாநிலக் கட்சிகளை உடைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களுக்கான கதவுகளை இறுக்கி மூடிக் கொண்டிருப்பதால்… மக்களின் கோபம் மத்தியிலிருப்போர் மீது உள்ளூர மூண்டெழுந்து கொண்டேயிருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தமிழகத்தை இதுவரை ஆண்டவர்களை விட தாங்கள் மேலானவர்கள் என்று பாஜக நினைத்தால், அதை அவர்கள் நேர்வழியில் நின்றுதான் உணர்த்த வேண்டும். அப்போதுதான் மக்களின் மனதில் இடம் பெற முடியும். இல்லையென்றால் என்னவாகக் கூடும் என்று அலாரம் அடிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம் .

ஐந்தாண்டுகளுக்கு வாக்கு வாங்கி வந்த அதிமுக என்னும் பெரிய கட்சியை இரண்டாக்கி, மேலும் மூன்றாக்கியது மட்டுமல்லாமல்… இருவருக்கும் ஆகவில்லை என்று தெரிந்தும் கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் வலுக்கட்டாயமாக மேடையேற்றி வைத்துக் கொண்டு, அவர்களின் பதவி வெறியை ஊரறிய வெளிப்படுத்திக் காட்டி ரசிப்பதெல்லாம் வாக்காளர்கள் மனதில் அச்சத்தைத் தான் உண்டு பண்ணும் என்பதை அவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

அமைச்சரவையை சரியாக வழி நடத்த ஆளில்லாமல், ஆட்சி முறை கெடுகிறது என்று மக்கள் ஒன்று கூடி போராட்டம் செய்வார்களேயானால், அமைச்சரவையை கலைத்து விட்டு ஆளுனர் ஆட்சியை கொண்டு வந்து விடுவதுதான் முறையான தாகவும், பாஜக தலைமைக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும்.

மாறாக, இப்போதும் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையில் நறுமணம் வீச வாய்ப்பில்லை.

திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகத்தை அமைப்பது அப்புறம் இருக்கட்டும். திராவிடக் கட்சிகள் சினிமாவை அரசியலுக்குள் கொண்டுவந்து சீரழித்து விட்டது என்று குற்றம் சாட்டும் பாஜக, ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் என்ன செய்தது ? கங்கை அமரனைத் தானே கொண்டு வந்து நிறுத்தியது.

அவரென்ன மெத்தப் படித்தவரா ? சமூகப் போராளியா ? நின்று நிதானித்துப் பேசும் பக்குவம் கொண்டவரா ? அட, குறைந்த பட்சம் பாஜகவின் கொள்கைகளுக்காக போஸ்டர் பசையாவது காய்ச்சியிருக்கிறாரா ? சுமாரான சினிமாக்காரர் என்பதைத் தாண்டி அவரிடம் வேறு என்ன இருந்து விட்டது.

படித்த – ஒழுக்கமான – சமூக சிந்தனையாளர் ஒருவரை ஆர்.கே. நகரில் கொண்டு நிறுத்தி, “ மக்களே, இதோ பாருங்கள் எங்களின் மாற்று அரசியலின் ஆரம்பத்தை…” என்று சொல்லியிருந்தால் சரியானதாக இருந்திருக்கும். அப்படி செய்யவில்லையே.

தங்கள் வேட்பாளரை சோற்றுக்கு செத்த கூத்தாடியைப் போலத் தெருத் தெருவாக சினிமா பாட்டைப் பாட விட்டுத் தானே ஓட்டு கேட்டார்கள்.

பின்பு, எந்த அருகதையை வைத்துக் கொண்டு “சினிமா கொட்டகையிலிருந்து குதித்து வந்தது திராவிடம்” என்று கேலி பேசுகிறார்கள் ?

எந்த தார்மீகத்தின் மேலேறி நின்று கொண்டு திராவிடக் கருத்தியல் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்கிறார்கள் ? அப்படி, திராவிடத்தை தாண்டிய அவர்களின் சித்தாந்தம்தான் என்ன ?

அப்படி ஒன்று உண்டெனில், அந்த தங்கக் கோட்பாட்டை மக்களிடம் சொல்லி அதற்கு அவர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்று ஆட்சி அமைத்து விட வேண்டியது தானே ? எதற்கு இவ்வளவு அதிருப்திகள் ? அதிகார, மறைமுகத் துஷ்பிரயோகங்கள் ?

இப்படியே மனம் போன போக்கில் தப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தால் என்னவாகும் ?

திராவிடப் பிண்ணனி கொண்ட, அதிமுக – திமுக – மதிமுக – தேமுதிக – வி.சிக்கள் இவர்களோடு கூட கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் என மொத்தமும் சேர்த்தால், அதன் விழுக்காடு 80 ஐத் தாண்டி விடும்.

திராவிடக் கட்சிகளை எதிர்த்தாலும் – அதற்கு சமமாக பாஜகவையும் எதிர்க்கும் பாமகவின் வாக்கு வங்கியும் இதில் இணைந்தால் அது 90 ஐக் கடந்து விடும். நடு நிலையாளர்களும் ஒன்றிணைந்தால், பாஜகவின் சவாலுக்கு எதிரான வாக்கு வங்கி 95 ஐ எட்டிவிடும்.

“நம்மை மதிப்பதும் இல்லை. நமக்கு உதவுவதும் இல்லை. ஓரவஞ்சனையோடு நம்மை புறக்கணிப்பது மட்டுமின்றி, தங்களது அதிகாரத்தின் பெயரால் நமது கருத்தியலையே அழித்து விடுவதாகவும் பகிரங்கமாக சவால் விடுகிறார்களே…” என்று ஆவேசப்பட்டு, தமிழக பாஜகவுக்கு எதிராக இந்த 95 சதவிகிதமும் கொந்தளித்தால் என்னவாகும் ?

“தேசியத்தின் பெயரால் நமது தன்மானத்தை ஒட்டு மொத்தமாக நசுக்கப் பார்க்கிறார்களே…” என்று ஒட்டு மொத்த தமிழகமும் முறுக்கிக் கொள்ளுமானால் என்னவாகும் ?

தமிழகத்தின் அபயக் குரல் இந்தியாவைக் கடந்து எழக் கூடும். அப்படி ஒரு அபயக் குரல் எழுமானால், அது சீனாவின் அரசியல் காதுகளில் சுநாதமாக ஒலிக்கக் கூடும்.

இந்தியா, இலங்கைக்கு தண்ணீர் டாங்கியும் – அரிசியும் கொடுத்ததாமே… அது போல, நாமும் தமிழகத்துக்கு ஏதாவது கொடுத்தால் என்ன என்று சீனாவும் நினைக்கக் கூடும்.

பாபா வான்காவின் தீர்க்கதரிசனத்துக்கு நாமே வலிந்து வழி விட்டாற் போல ஆகி விடக் கூடும்.

இந்திய மண்ணின் மீதும் நமது அழகிய கலாச்சாரத்தின் மீதும் ஏற்கெனவே சீனாவுக்கு ஒரு கண் உண்டு. போதாததற்கு, தமிழகம் பூகோள ரீதியாக தென்கடைக் கோடியில் கடலோரப் பிரதேசமாக வேறு அமைந்திருக்கிறது. தமிழகத்துக்கு மிக அருகில் இருக்கும் இலங்கையில், ஏற்கனவே அவர்கள் தங்களது நிலையை ஊன்றி விட்டதாகக் சொல்லப் படுகிறது. அங்கிருந்து கூப்பிடு தூரம் தான்.

அப்படி ஒரு நிலை வந்தால், இங்கே இருக்கும் கம்யூனிஸ்டுகள் உலகமெங்கும் ஆக்ஸிஜனால் நிரம்பி விட்டதுபோல புத்துணர்வு கொள்வார்கள். நாலிரண்டு எட்டுக் கால்களில் ஓடோடிச் சென்று கப்பலில் ஏறி டிராகனை கையசைத்து அழைப்பார்கள்.

சீனா, தானாக உள்ளே நுழைந்தால் தான், அது சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுக்கும். ஆனால், தமிழகத்தில் இருந்து தாமாக முன் வந்து அபயக்குரல் ஒன்று எழுமானால், அது தன்னை நோக்கித்தான் எழுப்பப் படுகிறது என்று சொல்லிக் கொண்டு , உலக அரங்கில் தன் வல்லமையினால் மட்டையடி அடித்து, லாபி செய்து, மேலும் நியாயப்படுத்தி, எப்படியாவது உள்ளே புகுந்து விடவே பார்க்கும் .

சீன மக்கள் நல்லவர்கள். ஆனால் சீன அரசியல் வேறு மாதிரியானது. தங்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எதையும் செய்யும் மனோபாவம் சீன அரசியல்வாதிகளுக்கு உண்டு.

ஆகவே, தேவையற்ற அழுத்தங்களினால் தமிழகத்தை சீனாவின் பக்கம் பிதுக்கி அனுப்பாமல் இருப்பது நல்லது.

முடிவாக நாம் சொல்லக் கூடியது, மோடி அவர்களின் ஒற்றை பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்னும் மாரீச மாயையிலிருந்து முதலில் அந்தக் கட்சி விடுபட வேண்டும்.

அவரைப் போல பொறுமையோடும், நீண்ட கால திட்டங்களோடும் அயராது உழைக்க தமிழக பாஜக முன் வந்தே ஆக வேண்டும்.

திராவிட சிந்தனையால் இந்த நாடு அடைந்த நன்மைகள் ஏராளம் என்பதை உணர வேண்டும். திராவிட சிந்தனைகளை முன் வைத்த அரசியல்வாதிகளில் ஒரு சிலர் தவறிழைத்திருக்கலாம்.

அதற்காக, ஒட்டு மொத்த திராவிட கருத்தியலையும், திராவிட சிந்தனையாளர்களையும் அழித்து விடுவோம் என்றெல்லாம் வெளிப்படையாக பேசுவதை, செயல்படுவதை உடனடியாக நிறுத்தச் சொல்லி பாஜக தலைமை அறிவுறுத்த வேண்டும்.

இங்கிருக்கும் தமிழக பாஜகவினர் மோடி அவர்களின் கொள்கைகளை எடுத்து சொல்வதைவிட, அவர் பெயரை சொல்லி தங்களை வளர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றே மக்கள் கருதுகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மறைமுக அஜெண்டா இருப்பது மக்களுக்கே தெரியும் வகையில் அரசியல் முதிர்ச்சியற்று நடந்து கொள்கின்றனர். இதையெல்லாம் பாஜக உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

முதலில், தமிழகத்தில் நிம்மதியானதோர் ஆட்சி நடக்க ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகத்துக்கு சேர வேண்டிய சகல உரிமைகளையும் தடையின்றி வழங்க முன் வர வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு ஓர் நீதி, தமிழகத்துக்கு ஓர் நீதி என்ற தோற்றம் வராதபடிக்கு பரிபாலனம் செய்ய வேண்டும்.

இனியும் கண்டு கொள்ளாமல் மேலும், மேலும் புழக்கடை அரசியலை நோக்கி காய் நகர்த்திக் கொண்டேயிருந்தால், ஒற்றுமைக்கு ஓர் நாடு இந்தியா என்னும் பெயரை நாம் இழக்க நேரிடும்.

“எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்” என்னும் பாரதியின் உணர்ச்சிமிகு வரிகள், “சொல்லொடு சொல்” மோதிக் கொண்டு, ஓவென்று அலறி மார்பில் அறைந்து கொண்டு அழுது புரள நேர்ந்துவிடும்.

தேசிய கீதத்தை இசைக்கும் இசைத்தட்டு “திராவிட உத்கல…” என்னும் வரிகளை சமீபிக்கும் போது சுழல மறுத்து, மனம் கலங்கி சபிக்கக் கூடும்.

தமிழகம் இல்லாத இந்திய வரைபடத்தை சற்று மனக் கண்முன் நிறுத்திப் பாருங்கள். அது, இடது காலை இழந்த முடவனைப் போல தோற்றமளிக்கும்.

மீண்டும் ஒருமுறை, மாஸிடோனிய தீர்க்கதரிசி வான்காவை நினைவுபடுத்திக் கொள்வோம்.

சீனா வல்லரசாகிவிடும் என்று சொன்ன, தீர்க்கதரிசி பாபா வான்காவின் ஆதரவாளர்கள், வான்கா சொன்னால் அது தப்பாது. நடந்தே தீரும் என்கிறார்கள். வான்கா பற்றிய தங்களது ஆய்வில் அவரது தீர்க்க தரிசன சாத்தியக் கூறுகளுக்கான வாய்ப்பு (POSSIBILITIES) 85 சதவிகிதம் என்கிறார்கள்.

மீதமிருக்கும் 15 சதவிகிதத்தில் இந்தக் கட்டுரையின் அச்சம் அடங்கிப் போகட்டும். அதற்கு, எல்லாம் வல்ல பாரத மாதா அருள் புரியட்டும். அதுவரை, பாரத மாதாவுக்கு வாய்த்த சில அவசரப் பூசாரிகள் கொஞ்சம் அடக்கி வாசிக்கட்டும்.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் நம் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர் அதிவீரராம பாண்டியர். அவர் எழுதிய “நறுந் தொகையில்” இவ்வாறு அறிவுருத்துகிறார்…

மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்;

மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை.

எந்த மந்திரியாவது இதை எடுத்துச் சொல்லட்டும். ஆள்வோர் முறை செய்யட்டும்.

வரையாடு, வரைபடத்தை தாண்டாமல் இருக்கட்டும்.

ஜெய் ஹிந்த்.

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா…

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

[ஸ்ஸிங் ஸூயி 1](https://minnambalam.com/k/2017/11/13/1510511427)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share