அடர் எண்ண அலைக் கற்றைகள் ! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ந்துமதத்துக்கே உண்டானதொரு ‘ஸ்பெஷல்’ குலதெய்வக் கோயில்கள்!

துலுக்கானத்தம்மன், கண்ணகியம்மன், அங்காளம்மன், செங்காளம்மன், இசக்கி, பெரியாச்சி, செல்லியம்மா, குலுகாயி, மாசாணி இன்னும் எத்தனையோ பெயர்களில் இந்த மண்ணில் குலதெய்வங்கள் உண்டு. ஒவ்வொரு பெயரிலும் பல ஊர்களில் கோயில்கள் உண்டு. கொடை உண்டு. ஆண்டு திருவிழா உண்டு. காப்பு, காணிக்கை, நேர்த்திக்கடன் எல்லாம் உண்டு.

இதை ‘சிறு தெய்வ வழிபாடு’ என்கிறார்கள்.

தெய்வத்தில் ஏது சிறியது? பெரியது? மனிதரிடமே காணக்கூடாத பேதத்தை கடவுளிடம் காண்பது அபத்தம் அல்லவா? இந்த தெய்வங்கள் எல்லாம் யார்? மூலம் என்னவாக இருக்க முடியும்?

சிந்தித்துப் பார்ப்போம்.

**நம்பிக்கை.**

அது, காலப் புயலைக் கடந்து பயணிக்கும் மனித இனத்தின் ஆதி நங்கூரம். வேட்டைக்குப் போனவனுக்கு இரை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை. இரை தேடிப் போனவன், திரும்பி வந்துவிடுவான் என்பது குகையில் காத்திருந்த குடும்பத்தின் நம்பிக்கை. இரையைச் சுட்டுத் தின்னும் வரை குகை இடிந்து விடாது என்பது இருபக்க நம்பிக்கை.

இப்படித்தான் மனித இனத்தின் ஒவ்வொரு நாளும் கடந்தது, கடக்கிறது.

சிறு கட்டுமரத்தின் துணையோடு ஆழ்கடலுக்குள் அலையேறிப் போகும் ஒரு மீனவன், பயணத்துக்கு முன்னால் அந்தக் கட்டுமரத்தின் நுனியில் கற்பூரக் கட்டி ஒன்றை ஏற்றி வைத்து வணங்குகிறான். ஏன்? எதிர்பாராமல் கடல் பொங்கி விட்டாலும், அந்தக் கற்பூரப் பிரார்த்தனை கரை சேர்த்துவிடும் என்பது அவனது நம்பிக்கை.

நாஸாவின் கேஎஸ்சி-யிலிருந்து ஒரு ராக்கெட் புறப்படுவதற்கு முன் சர்ச்சுக்கு சென்று, மெழுகுவத்தி ஏற்றி, மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்கிறான் ஓர் அமெரிக்க ஆஸ்ட்ரோணாட். ஏன்?

கரும்பூதமாக அகண்டு வாய் பிளந்திருக்கும் பிரமாண்ட அண்டவெளிக்குள் ஒரு கடுகாய் நுழையப்போகும் என்னை, இந்த மெழுகுவத்தியின் ஒளி திரும்பக்கொண்டு வந்து பூமியில் சேர்த்து விடும் என்பது அவனது நம்பிக்கை.

நம்பிக்கைதான் வாழ்க்கை. ஊரே கூடி ‘உச்’ கொட்டினாலும், ஒருவன் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருப்பானேயானால், வாழ்க்கை அவனுக்கு வணங்கி வழிவிட்டு விடும். எதிர்பாராத உயரங்களில் கொண்டு நிறுத்தி விடும்.

ஆனாலும், வாழ்க்கையில் தோன்றும் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் மனிதனால் தீர்வு கண்டுவிட முடியாதல்லவா? அவ்வாறு மயங்கி நிற்கும் கணங்களில், அவன் நம்புவது கடவுளை மட்டுமே.

அதுவும், அவன் மனதில் முதலில் வந்து நிற்பது அவனது குலதெய்வக் கோயில்தான். ஒருமுறை குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று உறுதியாக நம்புகிறான்.

**அப்படி என்ன இருக்கிறது குலதெய்வக் கோயிலில்?**

200 வருடங்களுக்கு முன்பு, இந்த மண்ணில் எந்தவிதமான வசதிகளும் இல்லாததொரு காலகட்டத்தில், நம் முன்னோர்களுக்கு உயிர் பிழைத்து வாழ்வது என்பதே மிகவும் சவாலானதாக இருந்திருக்கிறது.

18, 19ஆம் நூற்றாண்டுகளில், நம் முன்னோர்களின் சராசரி ஆயுட் காலம் வெறும் 40 வயதே. ஒரு சிலரே அதைக் கடந்திருக்கிறார்கள். 60-ஐ தொடுவதெல்லாம் பெரும் சாதனையாகவே இருந்திருக்கிறது.

காரணம்? திடீர் திடீரென்று பரவும் தொற்று நோய்கள். அன்றைய காலகட்டத்தில், வியாதிகளை தீர்க்க ஒரே வழி நாட்டு மருத்துவமான சித்த மருத்துவம்தான். சித்த மருத்துவத்தில் இல்லாத மருந்தில்லைதான்.

ஆனால், கடல் கடந்து வியாபாரம் செய்து வருபவர்களால், அவர்களோடு வந்திறங்கும் மனிதர்களால், அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொருள்களால், அவற்றை சுமந்துவரும் அழுக்கு மூட்டைகளால்… இப்படிப் பல காரணங்களால், புதுவிதமான நோய்கள் உள்ளூர் மனிதர்களைத் திடீரெனத் தாக்கும்போது, அதற்குண்டான சரியான பச்சிலையைப் பரிசீலித்துக் கண்டுகொண்டு, மருந்து உண்டாக்குவற்குள் எண்ணற்ற உயிர்கள் பலியாகிப் போயிருக்கின்றன.

எப்படியாவது அந்த ஊரின் மக்களைக் காப்பாற்றியாக வேண்டுமே என்னும் பரிதவிப்பில், மருந்துக்கான புடம் போடும்போதோ அல்லது கூட்டுப் பொருள்களின் சேர்மானத் தவறாலோ எத்தனையோ மருத்துவ, மருத்துவச்சிகள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் .

இப்படியாக சீஸனல் தாக்குதல் ஒருபுறமிருக்க, நம் முன்னோர்களை அன்று அதிகம் அச்சுறுத்திக் கொண்டிருந்தது பிரசவம்.

**பிரசவம்**

ஆம், பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு ‘இரண்டாம் பிறப்பு’ என்பார்கள். ‘இரண்டு இன்ச் துளையின் வழியாக ஒரு மனிதன் வெளிவரத் துடிக்கும் அபாயகரமான பயணம் அது’ என்கிறார்கள். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் பிரசவ மரணங்கள் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. இந்த நவீன மருத்துவக் காலத்திலும்கூட பிரசவம் என்பது அச்சத்தோடுதான் பார்க்கப்படுகிறது என்றால், 200 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தின் கதி எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பிரசவமும் ஏதோ ‘பிழைத்திருந்தால் லாபம்’ என்ற நிலையில்தான் நடந்திருக்கக் கூடும். பெரும்பாலும் கூரை, சுண்ணாம்பு களிமண் பூச்சுள்ள வீடுகள் என்பதால் கடும் வெயில், மழைக் காலங்களில் கண்டிப்பாக நோய் தொற்றுப் பரவும். பலவீனமாக இருக்கும் தாயையும், பிறந்த குழந்தையையும் பதம் பார்க்காமலா இருக்கும்.

அதுபோன்ற சூழலில், ‘அஞ்சாதே நான் இருக்கிறேன்…’ என்று வந்து நின்றவர்கள்தான் அத்தனை கிராமத்துத் தெய்வங்களும்.

**கிராமத்துத் தெய்வம் என்போர் யார் ?**

அந்தப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த நாட்டு மருத்துவச்சிகள்.

ஆம், பச்சிலையின் குறியீடுதான் கையில் இருக்கும் வேப்பிலை. அந்தக் காலத்தில், இந்த மண்ணில் தன்னலமில்லாமல் அன்பே வடிவாக வாழ்ந்த பாசக்காரக் கிழவிகள். இந்த மண்ணின் மக்களை கண் போல் வளர்த்துக் காத்தவர்கள். கடவுளுக்கு நிகரானவர்கள். தாயாருக்கும் மேலான ‘மகா மனுஷி’கள்.

**நாட்டு மருத்துவச்சி என்போர் யார்?**

அந்தக் காலத்தில் ஊருக்கெல்லாம் பிரசவம் பார்த்துக்கொடுப்பவள். ஒரு சித்த மருத்துவருக்கு இணையாக பச்சிலைகளை அறிந்து வைத்திருப்பாள்.

நாடி பிடிப்பது, நடை பார்ப்பது எல்லாம் கிடையாது. கண்ணெதிரே பார்த்த மாத்திரத்தில் மனக்கணக்குப் போட்டு விடுவாள்.

ஒரு கிராமத்தில் யாரேனும் கர்ப்பமுற்று விட்டார்கள் என்ற சேதி கிடைத்த அடுத்த கணம், அந்த வீட்டின் வாசலில் நிற்பாள்.

என்னென்ன சாப்பிட வேண்டும்; என்ன சாப்பிடக் கூடாது. எப்போது குளிக்க வேண்டும்; எப்போது கூடாது. என்னென்னெ வேலைகள் செய்ய வேண்டும்; எதையெல்லாம் செய்யக் கூடாது. எத்தனை மாதம் வரை உடலுறவு கொள்ளலாம்; எதன்பின் கூடாது. எப்படி உட்கார வேண்டும்… எப்படி படுத்துக்கொள்ள வேண்டும் என்று சகலவற்றையும் கண்டிப்பு கலந்த பாசத்தோடு சொல்லித் தருவாள். இன்னொரு தாயாக நின்று தயை புரிவாள். முடிவில், உயிர் போய் விடாமல் பிரசவம் பார்த்துக் கொடுப்பாள். குலம் தழைக்க வைப்பாள்.

ஒருவேளை தாயில்லாத அநாதைப்பெண் என்றால், அந்த வீட்டிலேயே ஒரு ஓரத்தில் தங்கிக்கொள்வாள். தலைக்கு எண்ணெய் தேய்ப்பது முதல் கால்பிடித்து விடுவது வரை சகலமும் செய்து, கர்பிணியையும் அவள் கொண்ட கருவையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து எடுப்பாள்.

பத்தாம் மாதம், நாலு புறம் சீலை கட்டி, நடுவே கிடந்து துடிக்கும் தாயைவிடக் கூடுதலாக மனம் துடித்து, பிள்ளையை வெளி வாங்கி, கழுவி, நலம் செய்து, பிள்ளைக்கு மருந்தூட்டி, வழித்து அமர்ந்து கால் மேலிட்டு, தலைக்கு ஊற்றி, தொட்டிலிட்டு, பேரிட்டு, பிரசவ மருந்து செய்து, பத்திய சோறு ஆக்கிப் போட்டு, பித்த வாயு உருவி எடுக்கும் பச்சிலை மருந்தை இடுப்பு நோக மைய அரைத்துக் கொடுத்து, உப்புசம் குறைத்து, உடல்நலம் தேற்றி, தாயும் குழந்தையும் அச்சம் நீங்கி சிரிப்பதைக் கண்டு, திருஷ்டி சுத்தி தெருவில் போட்டுப் போய்க் கொண்டேயிருப்பாள்.

பக்கத்து தெருவில் கர்ப்பம் தரித்திருக்கும் அடுத்த அநாதையைக் கவனிக்க வேண்டுமே!

ஆம், அந்த ஊர் மனிதர்கள்மீது அவ்வளவு அன்பு அவளுக்கு. தான் பிறப்பெடுத்ததே அந்த ஊர் கர்ப்பிணிப் பெண்களைக் காப்பாற்றத்தான் என்றும் குழந்தைகள் பிறந்து இந்த உலகைக் காணத்தான் என்றும் பரிபூரணமாக தன்னை ஒப்புக்கொடுத்த ‘மகா மனுஷி’ அந்த ஊர் மருத்துவச்சி.

பிரசவம் பார்த்ததற்கு பிரதியுபகாரமாக எதையும் அவள் பெற்றுக் கொள்வதில்லை. அவளுக்கென்று ஊரோரமாய் கொஞ்சம் கீரைத் தோட்டம் இருக்கும். பத்துப் பதினைந்து முருங்கை மரங்கள் இருக்கும். அதிலேயே, தன் ஜீவனத்தை நடத்திக்கொள்வாள். புதுத்துணி எடுத்துக் கொடுத்தால், “எனக்கென்னடி கிழவி… நீ உடுத்திக்கடி என் செல்லம்…” என்பாள். அவ்வப்போது வந்து குழந்தைகளைக் கொஞ்சிப் போவதிலேயே அவளுக்குக் கொள்ளை இன்பம்.

அப்படி அந்த ஊரில் எத்தனை அநாதைத் தாய்மார்களுக்குத் தாயாக இருந்திருக்கிறாளோ? எத்தனைக் குழந்தைகளுக்கு இந்த உலகத்தைக் காணும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறாளோ? அவளது வழிகாட்டுதலும் துணையும் இல்லாது போயிருக்குமானால் எத்தனைக் சிசுக்கள் கருவிலேயே கருகியிருக்குமோ? எத்தனை தாய்மார்களின் உயிர் போயிருக்குமோ? அதனால் எத்தனைப் பேரின் சந்ததி தழைக்காமல் அழிந்து போயிருக்குமோ?

இத்தனை கேள்விகளுக்கும் தன் பாசம் சுமந்த எதிர்பார்ப்பில்லாத வெள்ளந்தியான புன்சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்து, அந்த ஊரின் பெண்களுக்கு எல்லாம் மன தைரியம் அளித்தபடி வளைய வந்துகொண்டிருந்த மகா மனுஷியாம் அந்த ஊர் மருத்துவச்சி ஒரு நாள் கண்மூடிப் போனாள்.

ஊரே கூடி அலறி துடித்தது. “ஐயோ, எங்களுக்கு உயிர்கொடுத்த நீ, இப்படிக் கண்மூடிக் கொண்டாயே… உன் முகத்தை எப்படி மறப்போம்” என்று புலம்பியபடியே, புதைத்த கையோடு, அந்த ஊர் குயவர்களை அழைத்து, அந்த மருத்துவச்சி போலவே ஒரு களிமண் சிலையைச் செய்ய சொல்லி, அதற்கு ஒரு சிறு கூரையும் செய்து வைத்தார்கள்.

பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காட்டுக்கு சுள்ளி பொறுக்கப் போகும் சமயங்களில், மருத்துவச்சியின் களிமண் சிலை இருக்கும் இடத்தைக் கடக்கும் போதெல்லாம், நின்று திரும்பி அந்த சிலையைப் பார்த்தபடி கண்ணீர்விட்டு நகர்வாள் தாய்.

“யாரம்மா அது…” என்று விசாரித்த பிள்ளைகளிடம்… அன்று பிரசவ வேதனையில் தான் துடித்தபோது இரண்டு உயிரையும் காப்பாற்றித் தர அந்த மருத்துவச்சி போராடியக் காட்சி அந்த தாயின் மனக்கண்ணில் ஓடி முடிக்க, தன் பிள்ளையை இறுக்கி அணைத்துப் பெரு மூச்செரிந்தபடியே… “அது…உனக்கும் எனக்கும் உயிர் கொடுத்த… நம்ம குல சாமிடா…” என்பாள்.

பிள்ளையின் ஆழ்மனதில் அது “குல சாமி” என்று பதிந்து போனது.

அந்தப் பிள்ளை வளர்ந்து பிழைப்புத் தேடி வெளியூர் பட்டணம் போகிறது. அங்கே, நன்றாக உழைத்து ஆளாகிறது. வியாபாரம் டல்லடிக்கும் சீசனில் ஊர் பார்க்க வருகிறது.

குலசாமி என்று சொல்லப்பட்ட அந்தச் சிலை இருக்கும் இடத்தை கடக்கும்போது, அங்கே அது பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறது. மனம் என்னவோ செய்கிறது. அந்தப் பிள்ளையைப் போலவே, வேறு இடங்களில் இருந்து ஊருக்கு திரும்பி வரும் பிள்ளைகளும் ஒன்று கூடி அதை சீர் செய்து செப்பனிடத் தொடங்க சிலர் பலர் ஆகிறார்கள்.

நல்ல சிற்பியிடம் சொல்லி அந்த உருவத்தைக் கற்சிலையாக வடித்து வைத்தது ஒரு பிள்ளை. நான் சுற்றுப் பிராகார சுவர் கட்டுகிறேன் என்றது ஒரு பிள்ளை. ஏன், நம் குலசாமிக்கு நான் கோபுரம் வைக்க மாட்டேனா என்றது ஒரு பிள்ளை. சந்நிதிக் கதவுக்கு நான் பொறுப்பு என்றது ஒரு பிள்ளை. உணர்வெழுச்சி பெற்ற ஊர் திரண்டு வந்து குளம் வெட்டிக் கொடுக்கிறது. பூசாரி வர, சூலம் நடப்பட்டு, குலசாமிக்குச் சக்தி அதிகம் என்று காட்டும் விதமாக, அவள் கரங்களில் வழக்கம் போலவே ஆயுதங்கள் பல கொடுக்கப்பட்டு, பூசையும் பொங்கலும் கொடையும் திருவிழாவுமாக களை கட்டி இப்போது ஓங்கி எழுந்து நின்றுவிட்டது அந்தக் குல தெய்வக் கோயில்!

உள்ளே உச்சி குளிர்ந்து நிற்கிறது நாட்டு மருத்துவச்சியின் பேரான்மா!

இளவேனிற்கால ஏரி நீர் போல, ஆனந்தமாக அசைகிறது அவளது ‘அடர் எண்ண அலைக் கற்றைகள்’.

**எண்ண அலைகள்!**

இந்த உலகமே எண்ண அலைகளால் நிரம்பியதுதான். நம் மனதில் தோன்றும் எந்த ஓர் எண்ணமும், அடுத்த கணம் அலைகளாக மாறி இந்தப் பிரபஞ்ச வெளிமுழுவதும் விரவிப் பரந்து நிறைகின்றன. ஆழ்ந்த தியான நிலையில் இருக்கும் ஒருவரால் அதை உணர முடியும். எண்ண அலைகளில், ‘வெளிர் எண்ண அலைகள்’, ‘அடர் எண்ண அலைகள்’ என இரு வகையுண்டு.

**வெளிர் எண்ண அலைகள்!**

இவைகள் பெரும்பாலும் சராசரி மனிதர்களால் வெளிப்படும் அர்த்தமில்லாத, ஆழமில்லாத, அபத்தமான எண்ண அலைகள் ஆகும். இவையெல்லாம் தோன்றிய அடுத்தடுத்த நிமிடங்களில் வலுவிழந்து ஆங்காங்கே மறைந்து விடுகின்றன.

**அடர் எண்ண அலைகள்!**

மானுட நிலைக்கும் மேலே இருந்துகொண்டு, சொல்லப் போனால் கடவுள் தன்மைக்கு ஈடாக ஒருவர் பிறரின்மீது அன்பு செலுத்தும்போது, அவரது எண்ண அலைகள் யாவும் சக்தி வாய்ந்த ‘அடர் எண்ண அலை’களாக எழுந்து “தோன்றிய இடத்திலேயே நிலை கொண்டு” விடுகின்றன. இது யோக சாஸ்திர தத்துவம்.

அப்படியாகத்தான், தன் மக்கள் மேல் அணு அணுவாகப் அன்பைப் பொழிந்த அந்த ஊர் மருத்துவச்சியின் ‘அடர் எண்ண அலைகள்’ யாவும், பிரபஞ்ச சக்தியின் கூட்டோடு, நாளுக்கு நாள் மேலும் வலுவடைந்து, ‘குலதெய்வக் கோயில்’ அதன் மேல் அடர் எண்ண அலைக் கற்றைகளாக நிலைகொண்டு விடுகின்றன.

சித்தர்கள் சமாதியில், தர்காக்களில் மக்கள் கூடுவது இதனால்தான்.

பெரிய ஆயி, இருளாயி, பேச்சியம்மா என வேறு வேறு பெயரில் இருக்கும் தெய்வங்களின் முகங்களை நன்றாக உற்றுக் கவனித்தால், வேறு வேறு வடிவங்களில் இருப்பதையும் காணலாம்.

ஒரு முகம் நீட்டமாக இருக்கும். மற்றொன்று வட்ட வடிவமாக அல்லது சதுரமாக இருக்கும். கூடவே, அனைத்து முகங்களும் இந்த மண்ணில் வாழ்ந்து களைத்த திராவிட முகங்களாகவே இருப்பதையும் காணலாம்.

சில இடங்களில் கிராமத்துத் தெய்வங்களுக்கு லேசாக உதட்டுக்கு மீறிப் பற்கள் துருத்தியிருப்பது போலக்கூட கண்டிருக்கிறேன்.

எந்த ஆகமத்தில் பற்கள் துருத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது? இல்லை, அழகுணர்ச்சியுள்ள எந்த சிற்பி அப்படிப் படைப்பார்? கிராமத்து தெய்வ வடிவங்களுக்கு என்று தனியாக ஏதேனும் சிற்ப சாஸ்திர இலக்கணம்தான் இருக்கிறதா அப்படி படைப்பதற்கு? அப்படியெல்லாம் ஏதுமில்லை.

அந்தப் பகுதியில், அப்படி உதட்டுக்கு மீறிப் பல் துருத்திக் கொண்டிருந்த நாட்டு மருத்துவச்சி ஒருவள் ‘மகா மனுஷி’யாக வாழ்ந்திருக்கிறாள் என்றே அர்த்தம். ஆம், அந்த தெய்வங்கள் எல்லாம் யாராலும் படைக்கப்பட்டவர்களில்லை. சர்வ சத்தியமாக இந்த மண்ணில் நமக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள்.

ஆம், அந்த கிராமத்துக் கோயிலுக்குள், அன்பே உருவான தன் அடர்ந்த எண்ண அலைகளோடும், தன் ஊர் சந்ததியினரின் முகம் காணும் ஆவலோடும் நின்றுகொண்டிருக்கிறாள் குலதெய்வம் எனப்படும் அந்த ‘நாட்டு மருத்துவச்சி’. பிழைப்பையும், பொருளையும் தேடிப்போன ‘தன் ஊர் சந்ததிகள்’ எங்கே இருக்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ என்ற கவலை அவளுக்கு இல்லாமலா இருக்கும்?

இங்கே, தொலைதூர நகரத்தில் வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கையில் சில சமயம் சிக்கல் ஏற்படுகிறது. செய்யும் தொழிலில், பார்க்கும் வேலையில் சுணக்கம் கண்டு விடுகிறது . தொழில் முகமாக செல்லுமிடங்களில், சொல்லுவது எதுவும் ‘ஒர்க் அவுட்’ ஆகாமல் சொதப்புகிறது.

அதற்கு என்ன அர்த்தம்? அவருடைய எண்ண அலைகளும் எதிராளியின் எண்ண அலைகளும் ஒத்துப்போகாமல் இருக்கிறது. அதனால் ஒர்க் அவுட் ஆகாமல் போகிறது. அதாவது, இவரது எண்ண அலைகள் போதுமான சக்தியோடு இல்லாமல் வலுவிழந்து போயிருக்கிறது என்று அர்த்தம்.

அதுபோன்ற நேரங்களில்தான் மனம் குழம்புகிறது. குலதெய்வத்தின் எண்ணம் வருகிறது. கனவில் வந்து அழைப்பதாக ‘காட்சி கண்டு’ குடும்பத்தோடு ஓடுகிறான் மனிதன்.

ஓடோடி வந்து நிற்கும் ‘தன் ஊர் சந்ததி’யைப் பார்த்து உச்சி குளிர்கிறது அந்த மருத்துவச்சியின் ஆன்மா. ‘இத்தனை நாள் எங்கடா போயிருந்த….?’ என்பது போல கொஞ்ச நேரம் அவனை அழ வைத்துப் பார்க்கிறது. பொங்கல் பூசையில் உள்ளம் குளிர்கிறது.

சந்நிதி வாசலில் கண்ணீர் மல்க நிற்கும் பிள்ளையின் வலிமையிழந்த எண்ண அலைகளை, தன் சக்தி வாய்ந்த ‘அடர் எண்ண அலைக் கற்றைகள்” கொண்டு, ஆரத்தழுவி ‘வலுவேற்றி’ விடுகிறது. அவனிடம் சேர்ந்திருக்கும் தீய எண்ண அலைகளை நொடியில் அகற்றி விடுகிறது. “போய் வா மகனே…” என்று கற்பூர ஒளியில் முகம்காட்டி சிரிக்கிறது.

பூசையும் பொங்கலும் முடிந்து ஊருக்கு திரும்பும்போது, மெல்லப் பின்னால் சாய்ந்து தன் மனைவியிடம் சொல்லிக் கொள்கிறான். “மனசு உருவி எடுத்தா மாதிரி, தெம்பா இருக்கும்மா…”

குலதெய்வ வழிபாட்டுக்குப் பிறகு தொழிலில் இறங்கும்போது, இப்போது அவனது “வலுவூட்டப்பட்ட எண்ண அலைகள்” எதிராளிகளின் எண்ண அலைகளுக்கும் மேலாக இருக்க, செல்லுமிடமெல்லாம் ‘ஒர்க் அவுட்’ ஆகிறது. எண்ணுவது நடக்கிறது. தொழில் ஸ்மூத்தாக முன்னேறுகிறது.

எல்லாம் “குலதெய்வம் செல்லாண்டி அம்மனின் அருள்” என்று கையெடுத்துக் கும்பிட்டபடியே, அடுத்த கொடைத் திருவிழாவுக்கு லாபத்தில் ஒரு பகுதியை எடுத்து திருநீறு பூசிய உண்டியலில் பயபக்தியோடு போட்டு வைக்கிறான்.

தனக்கு என்ன ஆனாலும் தன் குலதெய்வம் காப்பாற்றி விடும் என்று ஆழமாக நம்புகிறான். அந்த நம்பிக்கை அவனது முகத்தில் தன்னம்பிக்கையாக ஜொலிக்கிறது. அந்த ஜொலிப்பு தொழில் வசியமாக மாறுகிறது. முன்னேற்றுகிறது. அந்த ஆழமான நம்பிக்கையைத் தன் அடுத்த தலைமுறைக்கும் ஊட்டி வளர்க்கிறான்.

எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் ‘சயின்ஸ்’ சொந்த ஊரில் விரவி நின்று இருக்கும் அன்பே உருவான அந்த நாட்டு மருத்துவச்சியின் வலிமை வாய்ந்த ‘அடர் எண்ண அலைக் கற்றைகள்’தான்.

அந்த அடர் எண்ண அலைக் கற்றைகளின் வலிமையைத் தான் “அருள்” என்கிறார்கள். இது, நமது யோக அறிவியலில் அடக்கம்.

எது எப்படியோ, குடும்பத்தோடு, குலதெய்வக் கோயிலுக்கு ஒரு நடை சென்று வந்து விடுங்கள்.

அந்த ‘மகா மனுஷி’ உங்களுக்காகக் கால் கடுக்கக் காத்திருக்கிறாள்.

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா…

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share