ஸ்ரீராம் சர்மா
கல்லூரி மாணவர்கள் என்றாலே சிட்டி பஸ்ஸில் ஃபுட் போர்டு அடிப்பார்கள். கூச்சல் போடுவார்கள். ஈவ் டீஸிங் செய்வார்கள். ஸ்ட்ரைக் அடித்து சமூக அட்டகாசம் செய்வார்கள் என்று பொத்தாம் பொதுவாக வாரி இறைப்பதையெல்லாம் இனி மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.
இது, குருநானக் கல்லூரி எனக்குக் கொடுத்த சமீபத்திய அனுபவம்.
**குரு நானக் !**
பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியவர் மகான் குரு நானக் !
இந்து மதக் குடும்பத்தில் பிறந்தவர்தான் என்றாலும், தன் உள்ளுணர்வில் எழுந்த ஆன்மீக நெறிப்படி தன் வழியே தனித்ததோர் மதத்தை தோற்றுவித்தார். அதுவே சீக்கிய மதம்.
மகான் குருநானக் சீக்கிய மதத்தின் அடிநாதமாக “வந்த் கரோ – கிராட் கரோ – நாம் ஜப்னா “ என்னும் மூன்று கொள்கைகளை நிறுவினார்.
அதனை இவ்வாறு புரிந்து கொள்ளலாம்
வந்த் கரோ – எளியோரைத் தேடி உதவு.
கிராட் கரோ – ஊழலற்ற வருமானம் செய்.
நாம் ஜப்னா – இறைவனை ஓயாமல் துதி.
குருமகான் போதித்த மேற்கண்ட மூன்று புண்ணியங்களையும் சீக்கியப் பெருமக்கள் தங்கள் தலைப் பாகையோடு சேர்த்து முடிந்து கொண்டார்கள்.
சீக்கிய வாழ்வின் நெறிமுறையாக அதனை கடைபிடிக்கிறார்கள்.
இன்றைய இந்திய இராணுவத்தில் வீரம் செறிந்த தமிழர்களின் பங்கு மிகப் பெரிது. தமிழர்களுக்கு இணையாக தேசப்பற்றில் ஓங்கி நிற்பவர்கள் சீக்கியர்கள்.
தேசபக்தி, ஒழுக்கம், பணிவு, தொண்டு ஆகியவை சீக்கியர்களின் தனிக் குணம்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருமகானின் 500ஆவது பிறந்த ஆண்டைக் குறிக்கும் விதமாக தமிழகத்தில் துவங்கப்பட்டதுதான் புகழுடைய குரு நானக் கல்லூரி !
கடந்த பதினைந்து நாட்களும் குருநானக் கல்லூரி மாணவ – மாணவியர்களோடுதான் என் கலைப் பொழுது கழிந்தது. அடடா ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை திறமைகள் !
அசந்து போனேன். என் அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன். இன்றைய மாணவர்கள் மகா கெட்டிக்காரர்கள். புத்திசாலிகள். நல்ல நல்ல வாய்ப்புகளுக்கு ஏங்கித் தவிக்கும் வல்லமையாளர்கள்.
ஆனால், அவர்களைக் கண்டடையும் பொறுப்பை கல்லூரி நிர்வாகமும் பெற்றோர்களும்தான் ஒன்றிணைந்து ஏற்றுக் கொண்டாக வேண்டும். நம் மண்ணுக்கே உரிய கலையினை, கலாச்சாரத்தை, வீர விளையாட்டுக்களை அவர்களுக்குப் புகட்ட வேண்டும். குருநானக் கல்லூரி அதற்கு முன்வந்தது.
தனித்திறமை கொண்டு முன்னேற விரும்பும் மாணவர்களைக் கண்டு அடைந்து அவர்களை வழிநடத்த வேண்டியது ஓர் அரசாங்கத்தின் கடமைதான் என்றாலும். கூட, எல்லாவற்றையும் அரசாங்கமே செயல்படுத்திவிட முடியாது என்பதால் மாற்று அரசாங்கமாகச் செயல்படும் பொது அமைப்புகளும் இதனைத் தங்கள் கடமையாகக் கொண்டாக வேண்டும் !
ஆனால், கடமைப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள்?
இதற்கெனவே கடைவிரித்துக் காத்திருக்கும் ஏஜென்ஸிகள் சிலரை அழைத்து அவர்களிடம் தங்கள் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கடமை முடிந்ததெனக் கைகழுவிக் கொள்கின்றார்கள்.
வியாபார நிமித்தமாகச் செயல்படும் அந்த ஏஜென்ஸிகள் என்ன செய்கிறார்கள் ?
மேற்க்கத்திய நாடுகளின் அணுகுமுறையை அப்படியே காப்பியடிக்கிறார்கள். எடுத்த எடுப்பில் தங்கள் வசமிருக்கும் இளைஞர்களது டேட்டா பேஸைச் சுரண்டுகிரார்கள். அவர்களுக்கு வலைவீசி அழைத்து அவர்களிடம் நமது மண்ணுக்குச் சற்றும் பொருத்தமில்லாத அயல்நாட்டு அலப்பறைகளைப் புகுத்துகிறார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பார்த்து பெசன்ட் நகர் பீச் போன்ற வசீகரமான இடத்தில் பெருங்கூட்டமாகக் கூடச் செய்கிறார்கள். லவுட் ஸ்பீக்கர் வைத்து “ ஆஹா…ஊஊ..” என்று கூச்சல் எழுப்புகிறார்கள்.
“மராத்தான்” “ஸ்விம்மிங்ஸ்த்தான்” “சைக்கிள்ஸ்தான்” என்று ஏதோ ஒரு சைத்தான் முதுகேறிக்கொள்ளச் செய்து நமது இளைஞர்களை அலைக்கழித்து ஆர்ப்பாட்டம் காட்டுகிறார்கள்.
அதன் மூலம், நமது மண்ணுக்கே உரிய கலாச்சாரக் கதவுகளை இறுக மூடிவிடுகிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு “அடடா…..நாம் ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டோம்…” என்னும் திருப்தியை உண்டாக்கிக் காட்டிவிட்டுக் காசு பண்ணிக்கொண்டு நகர்ந்துவிடுகிறார்கள்.
தனித்திறன் கொண்ட திறமையுள்ள மாணவ – மாணவியர்களை அவமானம் செய்கிறோம் என்பதை அவர்கள் என்று உணரப் போகிறார்கள்? வெளியே சொல்லிக்கொள்ளாமல் உள்ளுக்குள் குமைந்தபடியே கொதிக்கும் மாணவ – மாணவியர்களின் கலாபூர்வமான உணர்வுகளை என்றுதான் மதிக்கப் போகிறார்கள்?
எங்களுக்குத் தேவையான வாய்ப்பினை மட்டும் எங்களிடம் கொடுத்துப் பாருங்கள். அதனை நாங்கள் வீரியமாகக் கொண்டு செலுத்தாவிட்டால் அதன் பின் எங்களைக் குறை சொல்லுங்கள் என்னும் மாணவ – மாணவியர்களின் ஏக்கத்தை எப்போதுதான் கண்டு கொள்ளப்போகிறார்கள் ?
அப்படிப்பட்ட மாணவ – மாணவியர்களைத் தேடிக் கண்டடைந்து வாய்ப்பு கொடுத்துவிட்டால் என்ன ஆகும்!?
அரங்கம் அதிரும்!
‘வேலு நாச்சியார்’ மரபார்ந்த நாட்டிய நாடகத்தை “ப்ரொஃபஷனல் டச்”சோடு வெளிப்படுத்தி அரங்கம் வென்ற குருநானக் கல்லூரி மாணவர்களின் கலை சார்ந்த உழைப்பே அதற்கு சாட்சியானது.
**ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி !**
“ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை” கண்காட்சியின் கோலாகலமான பத்தாம் ஆண்டு விழா சென்னை குருநானக் கல்லூரியில் சிறப்பாக நிகழ்ந்தேறியது !
நாடு முழுவதுமிருந்து திரண்டு வந்த பல லட்சக்கணக்கானவர்கள் அந்தக் கண்காட்சியால் பலனடைந்தார்கள்.
மரியாதைக்குரிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வழிகாட்டுதலில்…
இன்றைய தலைமுறையினரிடையே மண்ணின் மரபார்ந்த கலாச்சாரத்தை மீட்டெடுக்க அயராது உழைக்கும் திருமதி. ஆர். ராஜலக்ஷ்மி அவர்களின் முன்னெடுப்பில்…
குருநானக் கல்லூரியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான புத்தம் புது ஏ.ஸி அரங்கில் அரங்கேற்றப்படும் முதல் மரபார்ந்த நாட்டிய நாடகமாக கடந்த 3.2.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று…
‘வேலு நாச்சியார்’ இனிதே அரங்கேற்றப்பட்டது.
**இனி, ‘வேலு நாச்சியார்’ நிகழ்வின் சிறப்புகள்:**
‘வேலு நாச்சியார்’ மரபார்ந்த நாட்டிய நாடகத்தை நிகழ்த்திக் காட்டியவர்கள் அத்துனை பேரும் குருநானக் கல்லூரியின் மாணவ – மாணவியர்கள் மட்டுமே !
மாணவ – மாணவியர்கள் முன் பின் தியேட்டர் பயிற்சி அற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதேசி தியேட்டர்ஸ் சார்பில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரபார்ந்த தியேட்டர் பயிற்சிப் பட்டறை வெறும் 15 நாட்கள் மட்டுமே.
குருநானக் கல்லூரியில் வேலு நாச்சியார் நிகழ்வுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் மக்கள் டிவி புகழ் யோகா குருவும், எனது பால்ய கால நண்பருமான சிவரிஷி என்.கே.டி. ஜெயகோபால் அவர்கள். அவரே முன்வந்து தியேட்டர் யோகாவை வடிவமைத்து மாணவ – மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்தார்.
அசராமல் உழைத்தார்கள் மாணவ – மாணவியர்கள்.
“சார், இன்னும் சொல்லிக் கொடுங்கள்… இன்னும் சொல்லிக் கொடுங்கள்…”என்றபடி அவர்கள் வந்து வந்து நின்ற விதம் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. மொத்தம் 60 மாணவ – மாணவியர்கள் என்பதால் தனித்தனியாகப் பெயரை இங்கே குறிப்பிட இயலாது. ஒட்டுமொத்த டீமும் சூப்பர்!
டான்ஸ் க்ரூப்பில் தனித்தன்மையோடு ஆடியபடி லீட் செய்து கொண்டிருந்த மாணவி ரம்யா எதிர்பாராத விதமாகக் காலில் அடிபட்டு நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனது. தங்கள் சக மாணவிக்காக ஒட்டுமொத்த டீமும் ஒரு நிமிடப் ப்ரார்த்தனை செய்து கொண்டு நடனப் பயிற்சியை தொடர்ந்த விதம் நெகிழ்ச்சியானது .
ப்ரொஃபஷனல் மேடைக்குச் சற்றும் முன் அனுபவமற்றவர்கள் என்றாலும்கூட அபரிமிதமான தங்கள் கலையார்வத்தால் பதினைந்தே நாட்களில் என்னால் சொல்லிக் கொடுக்கப்பட்ட மொத்த தியேட்டர் சயின்ஸையும் வெகு வேகமாக உள் வாங்கிக் கொண்டு தங்கள் திறமையால் அசர அடித்தார்கள்.
அவர்களது ஆடலிலும் நடிப்பிலும் மிளிர்ந்த மிதமிஞ்சிய “ப்ரொஃபஷனல் டச்” அரங்கத்தை அதிரச் செய்தது. ஒட்டுமொத்த அரங்கமும் காட்சிக்குக் காட்சி ஆர்ப்பரித்துக்கொண்டேயிருந்தது.
இந்த மண்ணுக்காகப் போராடிய முன்னோர்களான வெற்றி மகாராணி வேலு நாச்சியாரையும், மாமன்னர்கள் மருது பாண்டியர்களையும், உயிர்த் தியாகிகளான உடையாளையும், வீரத் தளபதி குயிலியையும் மனதார பூஜிக்கும் விதமாக காட்சிக்கு காட்சி கரவொலிகளும், கூச்சலுமாய் தன்னை மறந்தது அரங்கு நிறைந்த அந்தக் கூட்டம்.
தாமதமாக வந்தவர்கள் அரங்கத்தில் இடமில்லாததால் வாசற் கதவுகள் தோறும் நெருக்கியடித்து நின்றுகொண்டு ஆர்ப்பரித்த அந்தக் காட்சி மரபோடிவந்த தேசபக்தியை பறை சாற்றியது.
இந்த மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைய் அர்ப்பணித்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் தோன்றி வரும் காட்சிகளை எல்லாம் வரலாற்றுபூர்வமாகப் பல விதங்களில் மெருகேற்றியிருந்தேன்.
மருது பாண்டியர்கள் தோன்றி உறுமும் போதெல்லாம் எழுந்த கரவொலிகள்… “முன்னோர்களே…. எங்களுக்காகத் தியாகம் செய்து மடிந்த உங்களுக்கான நன்றி உணர்வு என்றும் எங்களிடம் நீர்த்துப் போகாது…” என நெகிழ வைத்தது.
ஒட்டுமொத்தப் புகழும் அந்த பதினெட்டாம் நூற்றாண்டுக்கும், விழா அமைப்பாளர்களுக்கும், மரபார்ந்த நாட்டிய நாடகத்தை உள்வாங்கி நடித்த மாணவ – மாணவியர்களுக்கும் மட்டுமே உரியது. வழக்கம் போல் நான் ஒரு கருவி மட்டுமே.
இந்திய விடுதலை வரலாற்றின் ஒரே வெற்றி நாயகியான வேலு நாச்சியாரை கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி ஓங்கிப் பிடிக்கத் துவங்கி விட்டார்கள். சுதந்திர வரலாறைச் சுவாசித்து விட்ட இளைய தலைமுறையினரை இனி எவராலும் அடிமைப்படுத்த முடியாது என்ற நம்பிக்கையை ஆழமாகப் பதிந்துவிட்டார்கள்.
அரும்பாடுபட்டு மீட்டெடுக்கப்பட்ட இந்த வெற்றி வரலாற்றை 2010ஆம் ஆண்டே ஆர அரவணைத்து உயர்த்திப் பிடித்தவர் போற்றுதலுக்குரிய வைகோ! அரசியல் வேட்கையைக் கிஞ்சித்தும் கலக்காமல் இந்தியத் தமிழ் மண்ணின் உண்மை வரலாற்றை உயர்த்திப் பிடித்த அவரை வேலு நாச்சியாரின் பேரான்மா என்றும் வாழ்த்தும்!
உண்மையையும், பெண்மையையும் வழிவழியாகப் போற்றி ஒளிர்ந்த மேன்மையான வரலாறு பாரதத் திருநாட்டுக்கு உண்டு.
அது, முன்னோரை மறக்காது!
வேலு நாச்சியாரை விட்டுக் கொடுக்காது!
(கட்டுரையாளர் **ஸ்ரீராம் சர்மா** எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன் ஸ்ரீராம் சர்மா)
�,”